Monday, December 8, 2025

சூடுபிடிக்கும் வர்த்தக போர்! சீனாவை டார்கெட் செய்யும் டிரம்ப்! சர்வதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு!

சீனாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எதிர்த்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இதனால் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.

இந்த முடிவைத் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து வெளியிட்ட டிரம்ப், ஸ்மார்ட்ஃபோன்கள், மின்சார வாகனங்கள் போன்றவற்றை தயாரிக்க பயன்படும் அரிய கனிமங்களின் ஏற்றுமதி வரியை சீனா உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது அமெரிக்கா மட்டுமல்லாது பல நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா இதற்கான திட்டத்தை பல ஆண்டுகளாக திட்டமிட்டு செயல்படுத்தி வருவதாகவும், உலக வர்த்தக சந்தையில் இத்தகைய யுக்தியை இதுவரை எங்கும் காணவில்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார். மேலும், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனா அமெரிக்காவுக்கே மட்டும் அல்லாது அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி வரியை உயர்த்தியுள்ளதாக விளக்கம் அளித்தார்.

சீனப் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கும் டிரம்பின் முடிவு, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னணியில், வரும் 31-ம் தேதி தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில், டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேருக்கு நேர் சந்திப்பார்களா என்பது தற்போது சர்வதேச அரசியலில் முக்கியமான கேள்வியாக எழுந்துள்ளது.

Related News

Latest News