தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். சமீபத்தில் கரூரில் நடந்த நிகழ்வில் ஏற்பட்ட சோக சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்விலும், அதற்கு முன் நடந்த பல்வேறு நிகழ்வுகளிலும், விஜயுடன் எப்போதும் நிழலாகக் காணப்படும் நபர் ஒருவர் இருக்கிறார். அவர் நயீம் மூஸா.
விஜய் கட்சித் தொடங்கியதிலிருந்து, அவருக்கு தனிப்பட்ட பாதுகாவலராக இருந்து வருபவர் நயீம். பரந்தூர் ரோடு ஷோ, மாணவர்கள் விருது விழா உள்ளிட்ட எல்லா நிகழ்ச்சிகளிலும் விஜயைச் சுற்றி பாதுகாப்பாக செயல்பட்டார்.
புதுச்சேரி மாஹேவில் பிறந்த நயீம், கேரளாவை சேர்ந்தவர். தற்போது துபாயில் வசிக்கிறார். பாடிபில்டிங்கில் ஆர்வம் கொண்ட அவர், அங்கு வேலைக்காகச் சென்றபோது பாதுகாப்பு துறையில் நுழைந்தார். பின்னர் ஜென்டர் செக்யூரிட்டி என்ற பெயரில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
கடந்த பத்து ஆண்டுகளாக துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், ஜஸ்டின் பெய்பர், ஷாருக்கான், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது.
அமீரக அரசின் நம்பிக்கைக்குரியவராகக் கருதப்படும் நயீம், ஒவ்வொரு ஆண்டும் புர்ஜ் கலீபாவில் நடைபெறும் புத்தாண்டு விழா, ஆசியக் கோப்பை T20 தொடர் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்குப் பாதுகாப்பு கொடுத்துள்ளார். இந்தியாவிலும் அவரது நிறுவனத்துக்கு கிளைகள் உள்ளன.
விஜய்க்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கியிருந்தாலும், தனிப்பட்ட முறையிலும் நயீம் அவருடன் இருந்து வருகிறார். துபாயில் வசித்தாலும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் சென்னைக்கு வந்து விஜய்க்கு அருகிலிருந்து பாதுகாப்பு கொடுக்கிறார். பாதுகாப்பைத் தாண்டி பிரபலங்களுடன் நெருங்கிய நட்பும் இருந்து வருவதால், விஜயின் ஒவ்வொரு நிகழ்விலும் நயீமின் பங்கு உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.