உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா கைவிடுவதற்காகவே இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதிபர் ட்ரம்ப் மிகப்பெரிய அழுத்தத்தை தந்திருக்கிறார். மேலும், இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் உள்ளிட்டபிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார். இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் தனக்குள் உறுதிமொழி எடுத்திருக்கிறார். மட்டுமல்லாமல், ட்ரம்ப் விரைவாக அமைதியைக் கொண்டுவர விரும்புகிறார்’ என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘நேட்டோ பொதுச் செயலாளர் உட்பட அனைத்து ஐரோப்பிய தலைவர்களும் இது ஒரு சிறந்த முன்னெடுப்பு என்று ஒப்புக்கொள்கின்றனர். இருதரப்பு உறவை பலப்படுத்த அமெரிக்க அரசாங்கம் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் இணைந்து செயல்படுகிறது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
அமெரிக்க மண்ணில் புதினுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய 48 மணி நேரத்தில், ஐரோப்பிய தலைவர்கள் அனைவரையும் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் சந்தித்தார். எனவே, ஐரோப்பிய தலைவர்கள், ட்ரம்ப்பின் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கும், ரஷ்யாவின் நிலைப்பாட்டை தாங்கள் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை அவர் ஏற்படுத்திக் கொடுத்ததற்கும் அவர்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். இது இதற்கு முன்னிருந்த நிர்வாகத்தால் செய்யப்படாத ஒன்று’ என்று கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.