மனித உடலில் கல்லீரல் மிக முக்கிய பல வேலைகளை செய்கிறது. உணவில் உள்ள சத்துக்களை சீராக மாற்றி உடலுக்குத் தேவையான சக்தியை வழங்குவது, நச்சுக்களை நீக்குவது, இரத்தம் உறைய தேவையான புரதத்தை உற்பத்தி செய்வது போன்ற பல கடினமான பணிகளை இது மேற்கொள்கிறது. இவ்வளவு முக்கியமான கல்லீரல் செயலிழந்துவிட்டால், அதனால் ஏற்படும் விளைவுகள் உயிருக்கு ஆபத்தானதாக மாறலாம்.
கல்லீரல் செயலிழப்பிற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நீண்டகாலமாக அதிக அளவில் மதுபானம் அருந்துவது, ஹெபடிட்டிஸ் வைரஸ் தாக்குதல், அதிகப்படியான மருந்து உபயோகம், கல்லீரலில் கொழுப்பு அதிகம் தேங்குவது, சில மரபியல் நோய்கள் ஆகியவை அதற்குக் காரணமாகின்றன.
ஆரம்பத்தில் சோர்வு, வாந்தி, உடல் வீக்கம் போன்ற எளிய அறிகுறிகள் தோன்றலாம். கவனிக்காமல் விட்டால் இரத்தம் உறையாமல் bleeding ஏற்படுதல், மூளையில் நச்சு சேர்ந்து மயக்கம் வருதல், மனநிலை பாதிப்பு கூட ஏற்படலாம். இறுதியில் உயிரிழப்பு வரை கொண்டுசென்று விட்டுவிடும்.
ஆனால் இதைத் தவிர்க்க முடியாத நோயாகக் கருத வேண்டியதில்லை. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில எளிய வழிமுறைகள் உதவும். மதுபானம் தவிர்த்து, ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு உட்கொள்வது, ஹெபடிட்டிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது, மருந்துகளை அளவுக்கு மீறாமல் பயன்படுத்துதல், ஒழுங்கான உடற்பயிற்சி செய்வது, உடல் எடையை கட்டுப்படுத்துவது மற்றும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது ஆகியவை அவசியம்.
கல்லீரல் செயலிழப்பு ஏற்படாமல் தடுப்பது பெரும்பாலும் நம் கைகளில் தான் உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை தான் உயிரைக் காப்பதற்கான மிகச் சிறந்த மருந்தாகும்.
