Wednesday, February 4, 2026

இதனால் தான் என மகளை கொலை செய்தேன்., கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் வரதராஜன் (52). அவரது மனைவி உஷா (43). இவர்களுடைய மகள் வர்ஷினி (22). வர்ஷினி, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஓமியோபதி இறுதி ஆண்டு படித்து வந்தார். படிப்பிற்காக சேலத்தில் வாடகை வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 7ஆம் தேதி, வர்ஷினி தங்கி இருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சூழலில், நேற்று சேலத்தில் வைத்து வரதராஜனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் பரபரப்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதில், தனது மகள் வர்ஷினி நெல்லையில் பிளஸ்-2 படிக்கும் போது, அந்த பள்ளிக்கு பயிற்சி அளிக்க வந்த டேக்வாண்டோ பயிற்சியாளருடன் பழகியதாகவும், அந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார். அந்த பயிற்சியாளருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது தெரிந்ததும், மகளை கண்டித்து அந்த காதலை கைவிடுமாறு பலமுறை கேட்டதாக கூறியுள்ளார். ஆனால், மகள் காதலை கைவிட மறுத்ததாக தெரிவித்துள்ளார்.

பிளஸ்-2 முடித்த பிறகு, மகளை சேலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்த்ததாகவும், அங்கு படித்தபோதும் அவள் அந்த காதலை தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த நாளன்று இறுதியாக மகளை சந்தித்து காதலை கைவிடுமாறு கேட்டுக்கொள்ள சேலம் வந்ததாகவும், மகள் மறுத்ததால் ஆத்திரத்தில் அவளை அடித்ததாகவும் தெரிவித்துள்ளார். அதில், வர்ஷினி கீழே விழுந்த நிலையில், முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகு, மகளின் செல்போனை எடுத்துக்கொண்டு சென்னை சென்று வடபழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்ததாகவும், பின்னர் அங்கிருந்து திருப்பதி மற்றும் திருவண்ணாமலைக்கு இரு முறை சென்றதாகவும் தெரிவித்துள்ளார். போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்ததால், நீதிமன்றத்தில் சரண் அடையலாம் என எண்ணி சேலம் வந்த நிலையில், போலீசார் கைது செய்ததாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News