தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள த.வெ.க தலைவர் விஜய், விரைவில் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கத் தயாராகி வருகிறார்.
இப்போது ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஒன்றே ஒன்றுதான்… முதலமைச்சராக விஜய் கோட்டையில் அமர்ந்ததும் போடும் அந்த ‘முதல் கையெழுத்து’ எதுவாக இருக்கும்? த.வெ.க-வின் இந்த இமாலய வெற்றிக்கு அக்கட்சி வெளியிட்ட அதிரடி தேர்தல் அறிக்கைதான் மிக முக்கியக் காரணம். குறிப்பாக, பெண்களைக் குறிவைத்து விஜய் அறிவித்த திட்டங்கள் இப்போது பேசுபொருளாகியுள்ளன.
ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் தோறும் 2,500 ரூபாய் வழங்கும் திட்டம் தான் அந்த முதல் கையெழுத்தாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள், அரசுப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம் எனத் தமிழகப் பெண்களுக்கு அடுக்கடுக்கான இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.
குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமல்ல, இல்லத்தரசிகளின் பாரத்தைக் குறைக்க ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவியாக 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரத்துடன் கூடிய ‘தாய்மாமன் சீர்’ பெட்டகம் எனப் பெண்களின் மனதை வெல்லும் பல திட்டங்களைத் தனது கைவசம் வைத்துள்ளார் விஜய். அதேபோல், பள்ளி மாணவர்களின் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமும் இதில் அடங்கும்.
மக்களின் அடிப்படைத் தேவைகளான 200 யூனிட் இலவச மின்சாரம், 5 லட்சம் புதிய வீடுகள் மற்றும் சுத்தமான குடிநீர் விநியோகம் போன்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் த.வெ.க தீவிரம் காட்டி வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழகத்தின் தற்போதைய பெரும் சவாலாக இருக்கும் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க, முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் ஒரு ‘சிறப்புத் தடுப்புப் படை’ அமைப்பதே தனது முதல் பணியாக இருக்கும் என்றும் விஜய் தரப்பில் சொல்லப்படுகிறது.
விவசாயிகளுக்கு நெல் மற்றும் கரும்புக்குக் கூடுதல் விலை, சிறு விவசாயிகளின் குழந்தைகளுக்குக் கட்டணமில்லா உயர்கல்வி என ஒரு முழுமையான மாற்றத்தை விஜய் முன்மொழிந்துள்ளார். எது எப்படியோ, விஜய்யின் அந்த முதல் கையெழுத்து தமிழகப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழகத்தின் இந்த புதிய விடியலை நோக்கி மக்கள் இப்போது ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
