பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்கள்-2025’ன் பட்டியலை நேற்று தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 31 நகரங்களில் 12 ஆயிரத்து 770 பெண்களிடம் கருத்துக் கேட்டு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு நகரங்களின் தரவரிசை பட்டியலிடப்பட்டது.
இதில் நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமா, பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ள நகரமாக பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. அங்கு பெண்களுக்கு நல்ல மரியாதையும், பெண்களுக்கான கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தரவரிசையில் பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன. அங்கு கட்டமைப்பு வசதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், ஆணாதிக்க முறைகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.
கோஹிமா, விசாகப்பட்டினம், புவனேஸ்வரம், ஐஸாவல், காங்டாக், இடாநகர், மும்பை ஆகியவை சிறந்த பாதுகாப்பான நகரங்களாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா, டெல்லி, பரிதாபாத், பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் அந்த வரிசையில் பின்தங்கிய நிலையில் உள்ளன.