தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி நாமக்கல்லைத் தொடர்ந்து கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் நகரக் காவல்துறை இந்தச் சம்பவம் தொடர்பாக பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தொண்டர்கள் மரத்தின் மீதும், கடைகளின் கூரை மீதும் ஏறி அது முறிந்து விழந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்ட தள்ளு முள்ளு ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
கரூர் மாவட்ட தவெக செயலாளர் 10,000 நபர்கள் வருவார் என தெரிவித்திருந்தார். ஆனால், 25,000 பேர் வந்தனர். கூட்ட நெரிசலால் அசாதாரண சூழல் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சு திணறல், கொடுங்காயம், உயிர் சேதம் ஏற்படும் என தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோரிடம் பலமுறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.