பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தவிர்த்திருக்கக்கூடிய இத்துயர சம்பவத்திலிருந்து பொதுச்சமூகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமுள்ளன. உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கும் எங்களது இரங்கலைத் தெரிவிக்கிறோம். காயமுற்று சிகிச்சை பெறுபவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறோம்.
இந்தியாவில் அண்மைக் காலங்களில் அரசியல், சினிமா, வழிபாடு, கேளிக்கை. விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் நடந்த பூரி ஜெகன்னாதர் யாத்திரை. திருப்பதி கோயிலில் ஜனவரி மாதம் ஏற்பட்ட நெரிசல், கோவாவின் லைராய் தேவி கோவிலில் மே மாதம் ஏற்பட்ட நெரிசல், ஜூலையில் உத்தரகாண்ட்டின் மானசா தேவி கோயில் நெரிசல் அலகாபாத் கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசல், டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல், RCB அணியின் IPL வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசல், புஷ்பா திரைப்பட நிகழ்வில் ஏற்பட்ட நெரிசல் என நடப்பாண்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்கள் ஏராளம்.
அதில் பல உயிர்களை இழந்துள்ளோம் தற்போது அதிகரித்து வரும் வெப்பமும் உடன் சேர்ந்து விளைவுகளை மேலும் தீவிரமாக்குறது. காலநிலை மாற்றம், நகரமயமாதல், காடழித்தல் போன்ற காரணங்களால் தமிழ்நாட்டில் கொடும் வெப்பத்தன்மை (extreme heat stress) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் இதன் பாதிப்பு மேலும் விரியமடைகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்வில் (6/10/2024) கொடும் வெப்பத்தினால் நூற்றுக்கணக்கானோர் மயக்கமுற்றனர். மேலும் ஐந்து நபர்கள் உயிரிழந்தனர். அதேபோல் கடந்த 2024 ஆம் ஆண்டில் விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் (27/10/2024) லட்சக்கணக்கான மக்கள் கடும் வெப்பத்தினால் மயக்கமுற்றனர். வெயிலால் சோர்வடைந்து அவதிக்குள்ளாகினர்.
இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த த.வெ.க. வின் மதுரை மாநாட்டிலும் 18 வயது இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்தனர் மேலும் பலர் மயக்கமுற்றனர். தமிழ்நாட்டில் இது போன்ற வெப்பம் சார்ந்த துயர நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனவே இது போன்ற நிகழ்வுகளை ஆய்வுக்குள்ளாக்கி வருகிறோம்.
கரூரில் நடந்த கூட்டநெரிசல் துவங்கும் முன்னரே அங்கு வெப்பம் காரணமாகப் பலர் மயக்கமடைந்ததாக ஊடக செய்திகள் கூறுகின்றன. த.வெ.க. தலைவர் விஜய்யின் உரை தொடங்கும் முன்னரே ஒரு பெண் தனது மகளுடன் இறந்ததாகத் தெரியவந்தது மேலும் அன்று மதியம் நடந்த நாமக்கல் பரப்புரையிலும் த.வெ.க. தலைவர் விஜய் பேசும்போது பலர் வெப்பம் காரணமாக மயங்கி விழுந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே கரூர், நாமக்கல் ஆகிய இரு இடங்களிலும் கொடும் வெப்பத்தன்மை (extreme heat stress) நிலவி இருக்க வேண்டும். இக்கொடும் வெப்பத்தன்மை ஏன் இந்த அளவில் காணப்பட்டது. இதனால் மக்கள் ஏன் மயக்கமுற்றனர் என்பதை புரிந்துக்கொள்ள ‘புனல்’ என்ற கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஆய்வு மேற்கொண்டோம்.

Methodology – Punal Framework
புனல் கட்டமைப்பு. நிகழ்வு நடந்த இடத்தில் மக்களின் செயல்பாடுகள், வெப்பச்சூழல் முதலிய கள அறிக்கைகளைக் கொண்டு அன்று நிலவிய உலகளாவிய வெப்ப நிலைக்குறியீட்டை கணக்கிடுகிறது (Universal Thermal Climate Index). இது கொடும் வெப்பத் தன்மையைக் குறிக்கும் முக்கிய குறியீடாகும். மேலும் இக்கட்டமைப்பு JOS3 போன்ற வெப்பஉடலியல் மென்பொருள்களைப் பயன்படுத்தி மேற்கூறிய UTCI கணக்கீடுகளை உறுதி செய்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம் ‘உலகளாவிய வெப்ப நிலைக்குறியீடு’ (Universal Thermal Climate Index) எனும் முன்னெச்சரிக்கை ஆய்வு முறையை உருவாக்கியுள்ளது. இவ்வாய்வு முறையில் ஒரு நிலப்பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை (temperature), காற்றின் ஈரப்பதம் (humidity), சுற்றுப்புற வெப்பக்கதிர் (mean radiant temperature), காற்றின் வேகம் (wind speed) போன்றவற்றோடு மேலும் சில காரணிகளின் அடிப்படையில் இக்குறியீடு கணக்கிடப்படுகிறது. மனித உடல்மீது வெப்பம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு, அவை எந்த வெப்ப அளவில் நிகழக்கூடும், அவற்றுக்கு எவை காரணமாக இருக்கின்றன என்பதை மேற்கூறிய குறியீடு விளக்குகிறது. உயிர் கொல்லக்கூடிய அளவிலான கொடும் வெப்பத்தன்மையைத் துல்லியமாகக் கணிப்பதற்கு இக்குறியீடு உதவுகிறது.
உலகளாவிய வெப்ப நிலைக்குறியீடு 38oC க்கும் அதிகமாக இருந்தால் அதனை மிகவும் ஆபத்தான நிலை என்று வரையறுக்கின்றனர். தொடர்ந்து 1 முதல் 2 மணி நேரத்திற்கு இந்நிலை நீடித்தால் மிகுந்த அயர்ச்சி அல்லது மயக்கம் உண்டாகும். இக்குறியீடு 46oC க்கு மேல் இருந்தால் இறப்பு நேரும் அபாயமும் உள்ளது.
இந்த உலகளாவிய வெப்ப நிலைக்குறியீட்டை கண்டறிந்தபின் JOS3 போன்ற வெப்பஉடலியல் மென்பொருள்களைக் கொண்டு வெப்பத்தின் தாக்கத்தை உறுதி செய்ய முடியும் . வெப்பம் நிலவும்போது உடலின் அக வெப்பநிலை, இதய துடிப்பு, வியர்வை வெளியேறும் விகிதம் முதலிய உடலின் உள் அளவுறுகளில் ஏற்படும் மாற்றங்களை இம்மென்பொருள் கணக்கிடுகிறது. மேற்கூறிய வெப்ப நிலைக்குறியீட்டு மதிப்புகளால் உண்மையில் மயக்கமோ இறப்போ ஏற்பட்டதா என்பதை சரிபார்க்க இந்த JOS3 மென்பொருள் உதவுகிறது.
செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் காலை 8.45 மணிக்கு நாமக்கலிலும் மதியம் 12 மணிக்குக் கரூரிலும் மக்களைச் சந்திப்பாரென அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருவாரென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 8.45 மணிக்குதான் அவர் சென்னையிலிருந்தே விமானத்தில் புறப்பட்டார்.
பிற்பகல் 2.30 மணியளவில் நாமக்கல்லில் பரப்புரை நடக்குமிடத்தை இடத்தை த.வெ.க. தலைவர் விஜய் அடைந்தார். அதற்குள், அங்கே பலரும் மயக்கமடையத் தொடங்கினர். பெரும் கூட்டம், போதுமான நிழல், உணவு மற்றும் தண்ணீர் வசதிகள் இல்லாததால் மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நான்கு முக்கிய சாலைகள் கூடும் இடமாக உள்ள அவ்விடம் போதுமான வெளியேறும் வசதிகள் இல்லாத இடமாக இருந்தது.

இந்நிலையில் காலை 9 மணியிலிருந்தே சிறிது சிறிதாகக் கரூரின் வேலுசாமிபுரத்தில் மக்கள் கூடத் தொடங்கியிருந்தனர். 4 மணிக்குப் பிறகு மக்கள் மிக அதிகமாகக்கூடிய நிலையில் 7 மணியளவில்தான் த.வெ.க. தலைவர் அப்பகுதிக்கு வந்துள்ளார். அவரது வாகனத்தைப் பின் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கானோர் கூட்டம் நடக்கவிருந்த இடத்திற்கு வந்தனர். அவர் அங்கு வந்தடையும்போது கூட்டம் 30000 எண்ணிக்கையைக் கடந்திருந்தது. அவ்விடத்தில் இதற்கு முன்னரும் வேறு கட்சிகளின் கூட்டம் நடந்திருந்தாலும் அது ஒரு குறுகிய நகர்ப்புற இடமேயாகும். ஒழுங்குபடுத்துவதற்கு மிகவும் கடினமான ஒரு கூட்டத்திற்கு இவ்விடம் பொருந்தாது என்பதைக் கட்சியும் மாவட்ட நிர்வாகமும் முன்பே கணித்திருக்க வேண்டும்.
அன்று கரூரில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ், இது இயல்பைவிட 2.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். இதன் காரணமாக அங்குக் கொடும் வெப்பத்தன்மை நிலவியது. காலையிலிருந்து காத்திருந்ததால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் களைப்படைந்திருந்த மக்கள் பிரச்சார வாகனத்திற்கு இடமளிப்பதற்காக ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும், கூடவே வெப்ப வாதத்தாலும் (heat stroke) பலியாகியுள்ளனர். சில இறப்புகள் த.வெ.க. தலைவர் பேசத் தொடங்கும் முன்னரே நிகழத் தொடங்கியதாகச் செய்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

இத்தகு சிறிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதால், கூட்ட அடர்த்தி ஒரு சதுர மீட்டருக்கு 4 பேருக்கு அதிகமாக இருந்தது. இதனை ’critical crowd condition’ என்று கூறுவார்கள். இக்கட்டத்தில், கூட்டத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் 200W அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பத்தை வெளியிடக்கூடும். இதன் பொருள், வெளியிடப்படும் வெப்பம் 800 W/m2(ஒரு சதுர மீட்டருக்கு 800 வாட்) வரை அதிகமாக இருக்கலாம். பரப்புரை நடந்த நாளில் சூரிய கதிரியக்கத்தன்மை அதிகபட்சமாக மதியம் 800 W/m2 ஆக இருந்தது. (காற்று இல்லாமல் இறுக்கமாக நிரம்பிய கூட்டத்தில் இருப்பது உங்களைச் சுற்றி சூரியனின் வெப்பத்தைக் கொண்டிருப்பது போன்றது, ஆனால் வானத்திற்கு பதிலாக வெப்பமானது மக்களிடமிருந்து வருவது போன்றது என்பதே இதன் பொருள்). சரியான குளிரூட்டல் இல்லாமல், அப்பகுதியின் வெப்பநிலை சில டிகிரி வரை உயரும். இவ்வெப்பத்தை உடலானது வியர்வையின் மூலம் வெளியேற்றிக் குளிர்வித்திருக்க வேண்டும்.
அன்றைய நாளில் கரூர் மற்றும் நாமக்கலில் (வினாடிக்கு 4 மீ > வேகத்தில் கணிசமான காற்று வீசியது, அதாவது வியர்வை வெளியேற்றத்தின் மீது காற்று பட்டு அதனால் வெப்ப அழுத்தம் கணிசமாகக் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், பெரிய கூட்டத்தில், காற்று பெரும்பாலும் தடைபடும். மேலும், குறைந்த உயரம் கொண்ட நகர்ப்புறங்கள் காற்றின் ஓட்டத்திற்கு தடையாகச் செயல்படும், இது கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய இரண்டு நிகழ்வுப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இதன் பொருள் காற்றிலிருந்து வெப்பச்சலன குளிரூட்டல் (radiative cooling) பெரும்பாலும் பாதிக்கப்படும். பெரும்பாலான மக்களுக்குத் தேவையான காற்று தரை மட்டத்தில் 1 மீ / வி க்கும் குறைவாக இருந்திருக்கும்.
கூட்ட நெரிசலில் வியர்ப்பதைத் தவிர உடலைக் குளிர்விக்க வேறு வழிகள் இல்லாததால் அதிகமாக வியர்த்திருப்பார்கள். வியர்ப்பதும் நின்றவுடன் மயக்கமடைவதைத் தவிர உடலுக்கு வேறு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளியேறிய வியர்வையும் ஆவியாகி அப்பகுதியின் ஈரப்பதத்தை 5% அல்லது அதற்கும் மேலாக அதிகரித்திருக்கும். இதனால் வெப்ப அழுத்தம் உடலில் குறைந்த நேரத்தில் வேகமாக அதிகரித்திருக்கும்.
வெப்ப அழுத்தம்குறித்த ஆய்வு
எங்கள் ஆய்வின் அடிப்படையில், த.வெ.க. தலைவர் விஜய் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் நாமக்கல் மக்கள் கூடுதலாக 5 மணி நேரம் அதிக வெப்ப அழுத்தத்திற்கு (யு.டி.சி.ஐ > 38 டிகிரி செல்சியஸ்) ஆளானார்கள். சூரிய கதிரியக்கத்தன்மை மிக அதிகமாக மதியம் 916 W/m2 ஐ எட்டியது, இதன் விளைவாக நாமக்கல்லில் மிக உயர்ந்த MRT – Mean Radiant Temperature (சுற்றுப்புற வெப்ப கதிரியக்கத்தன்மை) ஏற்பட்டது. சூரியக்கதிரின் நேரடித் தாக்கம் மற்றும் குறைவான காற்று ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவால் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை தீவிர வெப்ப அழுத்த நிலை (UTCI > 38 டிகிரி செல்சியஸ்) ஏற்பட்டுள்ளது. உச்ச UTCI 42.6 டிகிரி செல்சியஸ் ஐ எட்டியது தெரியவந்தது. இரண்டு மணி நேரத்திற்கு இந்நிலையை உடல் எதிர்கொள்வது மயக்கத்தை உருவாக்கக்கூடியதாகும்.
நாமக்கல்லில் முதல் மயக்கம் பிற்பகல் 1 மணியளவில் நடந்திருக்க வேண்டும் என்றும், பிற்பகல் 2.35 மணிக்குத் த.வெ.க. தலைவர் விஜய் வரும்போது மாலை 4 மணிவரை தொடர்ந்திருக்க வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இம்முடிவு நாமக்கலில் அறிவிக்கப்பட்ட மயக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கைகளுடன் பொருந்தியது. கொடும் வெப்பத்தை அனுபவித்த பலர் நாள் முழுவதும் அல்லது அதற்குப் பிறகும் மோசமான விளைவுகளை எதிர்கொண்டிருப்பார்கள்.
அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களின் உடல் வெப்பநிலை 38.5 – 39.5°C ஐ எட்டியபோது பெருமளவில் மயக்கம் ஏற்பட்டது. இது மதியம் 1:30 – 3:00 (த.வெ.க. தலைவர், விஜய் உரையாற்றுவதற்கு முன்பும் உரையாற்றும் போதும்) மணிக்கு நிகழ்ந்துள்ளது. நிகழ்வு இன்னும் சிறிது நேரம் நீடித்திருந்தால், 40°C அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலையை உடல் எட்டியிருக்கும் . இது நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கும். இவற்றை வைத்துப் பார்க்கும்போது கொடும் வெப்பமும் மரணங்களும் மயக்கத்திற்கும் ஒரு காரணமாக அமைந்தது தெளிவாகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
