Sunday, April 20, 2025

‘ஆசுதோஷ்’ கிடையாது! DC-யோட வெற்றிக்கு இந்த 20 வயசு ‘ஆல்ரவுண்டர்’ தான் காரணம்!

லக்னோ-டெல்லி இடையிலான போட்டியில், டெல்லி திரில் வெற்றி பெற்றதற்கு அந்த அணியின், ஆசுதோஷ் சர்மா தான் காரணம் என்று பலரும் அவரை வெகுவாகப் புகழ்ந்து வருகின்றனர். ஆனால் உண்மையில் டெல்லி அணியின் ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகமைத் தான் இந்த பெருமை சேரும்.

20 வயது விப்ராஜ் தன்னுடைய முதல் IPL போட்டியிலேயே பவுலிங், பேட்டிங் இரண்டிலும் ‘முத்திரை’ பதித்து விட்டார். லக்னோ அணியின் அபாயகரமான வீரர் எய்டன் மார்க்ரம் 15 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறியதற்கு, விப்ராஜின் அபார பந்துவீச்சு தான் காரணம்.

இதேபோல டெல்லி அணி 113 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து அதல பாதாளத்தில் கிடந்தபோது, ஆபத்பாந்தவனாக வந்து அந்த அணியை கரை சேர்க்க உதவியதும் விப்ராஜ் தான். வெறும் 15 பந்துகளில் 31 ரன்களைக் குவித்து, எதிரணி பவுலர்களின் மனவுறுதியைக் குலைத்து விட்டார்.

இதையடுத்து தற்போது யார் இந்த விப்ராஜ் நிகம்? என்று, ரசிகர்கள் இணையத்தில் போட்டிபோட்டு அவரைத் தேடி வருகின்றனர். அந்தவகையில் விப்ராஜின் பின்னணி குறித்து இங்கே பார்க்கலாம்.

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 20 வயது விப்ராஜ் நிகமிற்கு கிரிக்கெட் தான் எல்லாமே. இவரின் ஆட்டத்தால் கவரப்பட்டு தான் கடந்த மெகா ஏலத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணி 50 லட்சம் ரூபாய்க்கு இவரை ஏலத்தில் எடுத்தது.

மாநில அணியான UP Falconsக்காக கடந்தாண்டு ஆடிய விப்ராஜ், 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தன்னை நிரூபித்தார். ஆல்ரவுண்டராக விப்ராஜின்  விக்கெட் வேட்டை ரஞ்சி, சையத் முஷ்டாக் தொடர்களிலும் தொடர்ந்தது.

2024-2025ம் ஆண்டில் மூன்று முதல்தர போட்டிகளில் ஆடிய விப்ராஜ், அதில் 9 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். பேட்டிங்கிலும் 103 ரன்கள் குவித்து ‘கெத்து’ காட்டினார். குறிப்பாக 8 பந்துகளில் 27 ரன்களைக் குவித்தது தான், இவருக்கு IPL வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தது.

விப்ராஜ் குறித்து டெல்லி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ”19 வயதுக்கு உட்பட்டோருக்காக விளையாடும் வரை விப்ராஜ் ஒரு பேட்ஸ்மேனாகத் தான் இருந்தார். பின்னர் படிப்படியாக பந்துவீச்சிலும் முன்னேற்றம் அடைந்தார். பேட்ஸ்மேனாக பயமின்றி விளையாடுகிறார். பந்துவீச்சிலும் கடுமையாக உழைத்து வருகிறார்.

பந்தை நன்றாகத் திருப்புகிறார்.

UP பிரீமியர் லீக், ரஞ்சி போட்டிகளில் அவரின் பேட்டிங்கைக் கண்டு, நான் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். பயமின்றி அதிரடியாக பெரிய ஷாட்கள் ஆடுகிறார். அவர் தனது வாழ்வில் மிகப்பெரும் வெற்றி பெறுவார் என்று நான் நம்புகிறேன்,” என்று மனதாரப் பாராட்டி இருக்கிறார்.

இதேபோன்ற சிறப்பான ஆட்டத்தை விப்ராஜ் தொடர்ந்து வெளிப்படுத்தும் பட்சத்தில், இந்திய அணியின் கதவுகள் விரைவிலேயே அவருக்குத் திறக்கக்கூடும். ஏனெனில் ஜடேஜா, ஹர்திக், அக்சர் படேலைத் தவிர்த்து சொல்லிக் கொள்ளும்படியான ஆல்ரவுண்டர்கள் யாரும், தற்போது இந்திய அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news