70 வருடங்களுக்குமுன்பே இறந்துபோன ஒரு பெண்மணி தொடர்ந்து லட்சக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றி வருகிறார்…
அதற்காக அந்தப் பெண்மணிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
எப்படி என்பதைப் பார்ப்போம்…
வாருங்கள்….
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹென்றிட்டா லாக்ஸ்- ஓர் இளம் தாயாகத் தனது கணவர் பால்டிமோருடன் சேர்ந்து 5 குழந்தைகளை வளர்த்து வந்தார். திடீரென்று உடல்நலன் பாதிக்கப்பட்ட ஹென்றிட்டா இரத்தப்போக்கு ஏற்பட்டு அவதிக்குள்ளானார். உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொண்டார்.
அங்கு அவருக்கு கர்ப்பப் பை வாய்ப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் ஹென்றிட்டா லாக்ஸ் 1951 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 ஆம் நாள் உயிரிழந்தார். மரணமடைந்தபோது அவருக்கு வயது 31 தான்.
முன்னதாக, ஹென்றிட்டா லாக்ஸ்க்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் அவருக்கு பயாப்ஸி சோதனை செய்தனர். அந்த சமயத்தில் ஹென்றிட்டாவுக்குத் தெரியாமலும் சம்மதம் பெறாமலும் அவருடைய உடலிலிருந்து திசுக்களை எடுத்து சேமித்து வைத்துக்கொண்டனர்.
ஹென்றிட்டாவின் திசுக்களை அவரது குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமலே பயன்படுத்தத் தொடங்கினர். 50 லட்சம் மெட்ரிக் டன்களாக அந்தத் திசுக்களைப் பெருக்கச் செய்து உலகம் முழுவதும் வியாபார நோக்கத்தோடு விநியோகித்தனர். மேலும், அந்தத் திசுக்களைக்கொண்டு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தத் திசுக்கள் புற்றுநோய்களுக்கான மருந்துகள், தடுப்பூசி, போலியோ தடுப்பூசி, எச்ஐவி வைரஸ், கோவிட் 19 வைரஸ் போன்றவற்றுக்கான மருந்துகள் கண்டுபிடிப்புக்கான அறிவியல் ஆராய்ச்சி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
அதன்பலனாக, கர்ப்பப் பைப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் HPV தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, குறைந்த வருமானம்கொண்ட நாடுகளில் 25 சதவிகிதத்துக்கும் குறைவானோர், குறைந்த- நடுத்தர வருமானம்கொண்ட நாடுகளில் 30 சதவிகிதத்துக்கும் குறைவானோர் தங்கள் நாட்டின் தேசிய நோய்த் தடுப்புத் திட்டத்தின்மூலம் இந்த HPV தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
ஹென்றிட்டா லாக்ஸின் திசுக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட HPV தடுப்பூசிகள் பல பெண்களைக் கர்ப்பப் பைப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றியுள்ளன.
அத்துடன், போலியோ தடுப்பூசி தயாரிக்கவும் ஹென்றிட்டாவின் திசுக்கள் பயன்பட்டுள்ளன. மேலும், எச்ஐவி, ஹீமோகுளோபியா, லூகேமியா, பார்க்கின்சன் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள், விட்ரோ கருத்தரித்தல் உள்ளிட்ட இனப்பெருக்க ஆரோக்கியத்தில் முன்னேற்றங்கள், குரோமோசோ நிலைமைகள், புற்றுநோய், மரபணு மேப்பிங், கோவிட் 19 தொற்றுநோய் ஆகியவற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
என்றாலும், 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஹென்றிட்டா லாக்சுக்குத் தற்போது உலக சுகாதார அமைப்பு விருது வழங்கிக் கௌரவித்திருக்கிறது. அந்த விருதை ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை அலுவலகத்தில் ஹென்றிட்டாவின் 87 வயது மகன் லாரன்ஸ் லாக்ஸ் பெற்றுக்கொண்டார்.
”மறைக்கப்பட்ட எங்கள் தாயின் தியாகம் இப்போதுதான் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் சிறப்பாக வாழ எங்கள் அம்மா உதவியுள்ளார். எங்கள் அம்மா இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்” என்று உருகுகிறார் ஹென்றிட்டாவின் மகன்.
அம்மா என்றாலே தியாகம்தானே…