தனது திருமணத்துக்காகத் தந்தை சேமித்து வைத்த 75 லட்ச ரூபாய்த் தொகையைப் பெண்கள் விடுதி கட்ட வழங்கியுள்ள பெண்ணின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் சிங் கனோட். இவர் தனது மகள் அஞ்சலி கன்வார் திருமணத்துக்காக சிறுகச் சிறுக 75 லட்ச ரூபாய் வரை சேமித்தார்.
இந்த நிலையில் அஞ்சலிக்கு திருமணம் நிச்சயமானது. நவம்பர் 21 ஆம் தேதி வாலிபர் பிரவீன் சிங்கைத் திருமணம் செய்துகொண்டார்
திருமணத்துக்கான சடங்குகள் முடிந்ததும் தனது விருப்பத்தை ஒரு கடிதம்மூலம் விருந்தினர்கள் மத்தியில் வாசிக்கச் செய்தார். அதனைத் தொடர்ந்து மகளின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட கிஷோர் சிங் ஒரு வெற்றுக் காசோலையைக் கொடுத்து நிரப்புமாறு கேட்டுக்கொண்டார். அஞ்சலியும் அதில் 75 லட்ச ரூபாயை நிரப்பி தந்தையிடமே கொடுத்துவிட்டார்.
தற்போது அந்தத் தொகை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஒரு பெண்கள் விடுதியைக் கட்டிமுடிக்க ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஏற்கெனவே இந்த விடுதி கட்டுவதற்கு கிஷோர் சிங் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது வழங்கியுள்ள இந்தத் தொகைமூலம் பெண்கள் விடுதி முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட உள்ளது.
தந்தை, மகள் இருவரின் தன்னலமற்ற நற்செயல் சமூக ஊடகவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது.
வரதட்சணையாக வழங்கப்பட்ட பெருந்தொகையைப் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும்விதமாக நன்கொடையாக வழங்கிய செயல் ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது.