சாக்கு நிறைய நாணயங்கள் கொண்டுவந்து டூ வீலர் ஷோரூம் நிர்வாகிகளை அதிரவைத்துள்ளார் காய்கனி வியாபாரி.
பொதுவாக, எந்தப் பொருளை வாங்கச்சென்றாலும், விற்பனையாளர்கள் ரொக்கமாகப் பணத்தைத் தாருங்கள் என்று சொல்வது வழக்கம்தான். அதுவும், சரியான தொகையாக சில்லரையுடன் கொடுங்கள் என்பார்கள். ஆனால், பணமாக இல்லாமல், கணிசமான அளவுக்கு நாணயங்களாக இருந்தால்…..எப்படியிருக்கும்…..?
இதோ பாருங்கள்…..
அப்படியொரு சம்பவம் நிகழ்ந்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரின் பொறுமையையும் சோதித்துள்ளது.
அஸ்ஸாமின் பர்பேட்டா பகுதியைச் சேர்ந்த காய்கனி ஒரு வியாபாரி, இரண்டு சக்கர வாகனம் ஒன்றை வாங்க விரும்பியுள்ளார். அதற்காக ஓராண்டாக சிறுகச் சிறுக சேமிக்கத் தொடங்கி, அவற்றை நாணயங்களாக சாக்குப் பையில் நிரப்பி வந்துள்ளார்.
2 வீலர் வாங்கும் தருணம் வந்தபோது, இரண்டு சக்கர வாகன ஷோரூமுக்குச் சென்று தன்னிடம் நிறைய நாணயங்கள் இருப்பதாக அவர்களிடம் தெரிவித்துள்ளார். ஷோரூம் நிர்வாகிகளும் நாணயங்களைப் பெற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, 3 சாக்குப் பை நிறைய நாணயங்களை எடுத்துக்கொண்டு ஷோரூமுக்குக் கொண்டுசென்றுள்ளார். ஷோரூம் நிர்வாகிகளும் அதனை 3 மணி நேரமாக எண்ணியுள்ளனர்.
அதில் 22 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. அந்த நாணயங்களை வாகனத்துக்கான முன்பணமாக எடுத்துக்கொண்டனர். 2 வீலருக்கான மீதமுள்ள தொகை நிதிநிறுவனம்மூலம் செலுத்தப்பட்டது.
காய்கனி வியாபாரியின் இந்தச் செயல் தற்போது வலைத்தளவாசிகளைக் கவர்ந்து வருகிறது.