Wednesday, February 18, 2026

தங்கத்தின் தலையெழுத்தை மாற்றும் அமெரிக்கா…வட்டி விகிதம் குறையுமா?

வாஷிங்டன்: தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தில் இருக்கும் நிலையில், உலகப் பொருளாதாரத்தின் மிக முக்கிய நிகழ்வு ஒன்று இன்று இரவு அரங்கேற உள்ளது. அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், வட்டி விகிதம் தொடர்பான தனது முக்கிய கொள்கை முடிவை இன்று வெளியிட இருக்கிறது. இந்த ஒற்றை முடிவு, அடுத்த சில மாதங்களுக்கு தங்கத்தின் விலைப் போக்கை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்தது என்பதால், உலக முதலீட்டாளர்கள் அனைவரும் திக் திக் நிமிடங்களுடன் காத்திருக்கின்றனர்.

தங்கம் விலை உச்சத்திற்குப் போனது ஏன்?

கடந்த சில ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு, உலக அரங்கில் ஏற்பட்ட புவிசார் அரசியல் பதற்றங்கள் தங்கத்தின் விலையை ராக்கெட் வேகத்தில் உயரச் செய்தன. அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டது, முடிவில்லாமல் தொடரும் ரஷ்யா-உக்ரைன் போர், மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் போன்ற காரணிகள், முதலீட்டாளர்களைப் பங்குச்சந்தை போன்ற riஸ்க் அதிகமான முதலீடுகளில் இருந்து விலகி, தங்கத்தின் மீது கவனத்தைத் திருப்ப வைத்தன. இதன் காரணமாக, தங்கம் ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாறியது.

இந்த அதிரடி விலை உயர்வின் தாக்கம் இந்தியாவிலும் கடுமையாக எதிரொலித்தது. நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 560 ரூபாய் உயர்ந்து, ₹82,240 என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டது. ஒரு கிராம் தங்கம் ₹10,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது என்பது ஒரு கனவாகவே மாறிவிட்டது.

அமெரிக்கா எடுக்கப்போகும் அந்த முக்கிய முடிவு என்ன?

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் இரண்டு நாள் கொள்கை கூட்டம் இன்றுடன் நிறைவடைகிறது. கூட்டத்தின் முடிவில், அமெரிக்காவின் வட்டி விகிதத்தை உயர்த்துவதா, குறைப்பதா அல்லது அப்படியே நீடிப்பதா என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும். தற்போது அங்கு வட்டி விகிதம் 4.25% முதல் 4.50% வரை உள்ளது.

வட்டி விகிதத்தைக் குறைத்தால்:அமெரிக்க டாலரின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் டாலரை விடுத்து தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள். இது தங்கத்தின் தேவையை அதிகரித்து, விலையை மேலும் உயரச் செய்யும்.வட்டி விகிதத்தை உயர்த்தினால் அல்லது மாற்றாமல் விட்டால்: டாலரின் மதிப்பு வலுப்பெறும். இது தங்கத்தின் விலையில் ஒரு சிறிய சரிவை ஏற்படுத்தக்கூடும்.

என்ன நடக்க அதிக வாய்ப்புள்ளது?

சமீபத்தில் வெளியான அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் திருப்திகரமாக இல்லாததால், அந்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் ஃபெடரல் ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அதிபர் டிரம்ப் தரப்பில் இருந்தும் பொருளாதாரத்தை மேம்படுத்த வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் எனத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள், அமெரிக்கா வட்டி விகிதத்தைக் குறைக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளனர். 0.25% வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், தங்கத்தின் விலை கணிசமாக அதிகரிக்கும்.

ஒருவேளை, அதிரடியாக 0.50% குறைக்கப்பட்டால், தங்கம் விலை கற்பனை செய்ய முடியாத உயரத்திற்குச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வட்டி விகிதத்தைக் குறைக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் அதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு.

எப்போது வெளியாகும் அறிவிப்பு?

இந்த பரபரப்பான கேள்விக்கான விடை, இந்திய நேரப்படி இன்று இரவு சுமார் 11:30 மணியளவில் தெரியவரும். ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவுல், செய்தியாளர்களைச் சந்தித்து வங்கியின் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். அந்த அறிவிப்புக்காகவே தங்கச் சந்தையும், உலகப் பங்குச்சந்தைகளும் காத்திருக்கின்றன. தங்கம் வாங்குவோரின் கனவும், முதலீட்டாளர்களின் எதிர்காலமும் அந்த ஒற்றை அறிவிப்பில் அடங்கியுள்ளது.

Related News

Latest News