சூரியக் குடும்பத்தின் வரலாற்றை மாற்றக்கூடிய முக்கியமான கண்டுபிடிப்பை சீன விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். நிலவின் இருண்ட பக்கத்திலிருந்து சேகரிக்கப்பட்ட பாறை மாதிரிகளில், உயிரின் அடிப்படை ஆதாரமான நீர் உருவான விதம் குறித்த மர்மத்துக்கு விடையளிக்கும் வகையில் புதிய ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சீனாவின் சாங்’இ–6 (Chang’e-6) எனும் விண்வெளி திட்டம் மூலம் கடந்த ஆண்டு நிலவின் மண் மாதிரிகள் பூமிக்குக் கொண்டுவரப்பட்டன. அவற்றை ஆய்வு செய்தபோது, விஞ்ஞானிகள் “சி.ஐ. கான்ட்ரைட் (CI Chondrite)” எனப்படும் அரிய விண்கல்லின் துண்டுகளை கண்டறிந்தனர். இவை பொதுவாக சூரியக் குடும்பத்தின் வெளிப்புறப் பகுதிகளில் காணப்படும். தண்ணீர் மற்றும் கரிமப் பொருட்களால் செறிந்த விண்கற்கள் இவை. பூமியில் கண்டுபிடிக்கப்படும் மொத்த விண்கற்களில், இந்த வகை 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன.
இந்தப் பாறைகள், சூரியக் குடும்பம் உருவாகும் முன் இருந்த தூசி மற்றும் விண்கற்களின் அமைப்பை பிரதிபலிக்கின்றன. நிலவு, வளிமண்டலம் அல்லது புவி இயக்கம் இல்லாததால், பழங்கால விண்கல் மோதல்களின் அடையாளங்களை மாற்றமின்றி பாதுகாத்துள்ளது. இதனால், அது ஆரம்பகால சூரியக் குடும்பத்தின் இயற்கை பதிவாக கருதப்படுகிறது.
ஆரம்பத்தில் இவை நிலவின் உள்புறப் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்று கருதப்பட்டாலும், இரும்பு, மாங்கனீசு மற்றும் துத்தநாகத்தின் அளவுகளை ஆய்வு செய்தபோது அவை சந்திரப் பாறைகளுடன் பொருந்தவில்லை என்று தெரியவந்தது. பின்னர், ஆக்சிஜன் ஐசோடோப்புகளின் விகிதங்களை ஆய்வு செய்ததில், இவை நிச்சயமாக சி.ஐ. கான்ட்ரைட் விண்கல்லிலிருந்து வந்தவை என உறுதி செய்யப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பு, பூமிக்கும் நிலவுக்கும் தண்ணீர் எவ்வாறு வந்தது என்ற பிரபஞ்ச மர்மத்திற்கு புதிய விளக்கமாகப் பார்க்கப்படுகிறது.
