பல்கலைக் கழகத்தின் அறிவியல் ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி ஆமை திறந்து வைத்த சம்பவ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து நாட்டில் 150 ஆண்டு பழமையான லிங்கன் பல்கலைக் கழகம் உள்ளது. இந்தப் பல்கலைக் கழகத்திற்கு விசிட்டிங் பேராசிரியராகத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் இயற்கை ஆர்வலருமான கிறிஸ் பேக்காம் சில மாதங்களுக்குமுன் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் லிங்கன் பல்கலைக் கழகத்தில் புதிதாக அறிவியல் ஆய்வகம் ஒன்று கட்டப்பட்டது. ஆய்வகத் திறப்பு விழாவை சிறப்பாகவும் வித்தியாசமாகவும் நடத்த விரும்பினார் பேக்காம். அதற்காகப் பல்கலைக் கழகத்தின் நீர்நிலையிள்ள ஆமையை அழைக்க முடிவுசெய்தார்.
அதைத் தொடர்ந்து திறப்பு விழாவுக்காக ஆய்வகக் கட்டடத்தின் முகப்பில் டேன்டேலியன் இலைகளால் ரிப்பன்போல் கட்டப்பட்டது. திறப்பு விழா அன்று விசிட்டிங் பேராசிரியர் பேக்காம் ஆமையைத் தனது கையில் வைத்துப் பிடித்துக்கொள்ள, தனது வாயால் கடித்து எட்டே விநாடிகளில் திறந்து வைத்தது சார்லஸ் டார்வின் என்று பெயரிடப்பட்டுள்ள ஆமை.
சில ஆண்டுகளுக்குமுன்பு நடைபெற்ற இந்தத் திறப்பு விழாவின் வீடியோ தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.