Saturday, January 31, 2026

வெடித்து ஓடிய அரசு பேருந்தின் டயர்., அலறிய பயணிகள்

காரைக்குடியில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் ஒன்று திடீரென வெடித்து கழன்று தனியாக ஓடியதால் பயணிகள் பீதியடைந்தனர். இருப்பினும், ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு பேருந்தை சாமர்த்தியமாகக் கட்டுப்படுத்தி பாதுகாப்பாக நிறுத்தியதால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

காரைக்குடியில் இருந்து கொடைக்கானல் நோக்கி அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கோபால்பட்டி அருகே மேட்டுக்கடை என்ற இடத்தில் காலை 10 மணி அளவில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநர் இருக்கைக்கு கீழுள்ள முன்பக்க டயர் ஒன்று வெடித்து கழன்று தனியாக ஓடியது.

இதைக் கண்ட பயணிகள் அலறியடித்துக்கொண்டு கூச்சலிட்டனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர், பேருந்தை ஒருவழியாக சமாளித்து சுமார் 10 மீட்டர் தொலைவில் மீதமுள்ள டயர்களுடன் ஓட்டிச் சென்று பாதுகாப்பாக நிறுத்தினார். இதனால் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.

பின்னர், அவ்வழியே வந்த வேறு அரசுப் பேருந்துகளில் பயணிகளை அனுப்பி வைத்தனர். அரசுப் பேருந்துகளில் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால், போக்குவரத்துத் துறை நிர்வாகம் பேருந்துகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

Latest News