சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை-மும்பை இடையிலான போட்டியில், மும்பையை வீழ்த்தி சென்னை தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. சென்னை பந்துவீச்சாளர்களே இதற்கு முக்கியக் காரணமாகும்.
குறிப்பாக CSK பவுலர்கள் கலீல் அஹமது, நூர் அஹமது இருவரும், மும்பை விக்கெட்டுகளை போட்டிபோட்டு வீழ்த்தி, சென்னையின் வெற்றியை உறுதி செய்தனர். இந்தநிலையில் பந்துவீச்சாளர் கலீல் அஹமது – கேப்டன் ருதுராஜ் இருவரும், பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவி வருகிறது. அதில் கலீல் தன்னுடைய கையில் இருக்கும் பொருள் ஒன்றை ருதுவிடம் கொடுக்க, அவர் அதை வாங்கி தன்னுடைய பாக்கெட்டில் போட்டுக்கொண்டு செல்கிறார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், ”BCCI அவங்க ரெண்டு பேர் மேலயும் நடவடிக்கை எடுக்கணும். பந்தை சேதப்படுத்தி இருக்காங்க. பாத்துட்டு பேசாம இருக்கீங்க” என்றெல்லாம், விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கலீல், ருதுவிடம் கொடுத்த பொருள் என்னவென்று தெரிய வந்துள்ளது.
அவர் தனது கையில் இருந்த மோதிரத்தை தான் ருதுவிடம் கொடுக்கிறார். பந்துவீச இடைஞ்சலாக இருக்கும் என்று கலீல் இப்படி செய்துள்ளதாகத் தெரிகிறது. அதற்குள் ரகசியமாக இருவரும் பந்தை சேதப்படுத்தி விட்டதாக, ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர்.
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று பெரியவங்க சும்மாவா சொன்னாங்க!