Monday, January 12, 2026

எங்கேயும் அலைய வேண்டாம்.,50 சேவைகளை Whatsapp மூலம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு

பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற அரசு சேவைகளை பெற இதுவரை அரசு அலுவலகங்களுக்கும் இ-சேவை மையங்களுக்கும் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. டோக்கன் வாங்கி நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியது, ஒரே நாளில் வேலை முடியாமல் பல நாட்கள் அலைய வேண்டியது போன்ற சிரமங்கள் பொதுமக்களுக்கு இருந்தன. ஆனால் இனி இந்த தொந்தரவுகள் தேவையில்லை.

மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அரசு சேவைகள் எளிமையாகவும் விரைவாகவும் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு புதிய வாட்ஸ்அப் சேவையை தொடங்கியுள்ளது. “நம்ம அரசு” என்ற இந்த வாட்ஸ்அப் சேவை மூலம், வீட்டில் இருந்தபடியே 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை மக்கள் பெற முடியும்.

இந்த சேவையின் மூலம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட வருவாய் துறை சார்ந்த பல சான்றிதழ்களை வாட்ஸ்அப்பிலேயே விண்ணப்பித்து பெறலாம். இதற்காக தமிழ்நாடு அரசு, வாட்ஸ்அப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த சேவையை பயன்படுத்த, 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து கொள்ள வேண்டும். அந்த எண்ணிற்கு “வணக்கம்” அல்லது “Hi” என்று ஒரு மெசேஜ் அனுப்பினால், உடனடியாக “Select Department” என்ற லிங்க் வரும். அதனை கிளிக் செய்தால் எந்தெந்த துறைகளின் சேவைகள் கிடைக்கும் என்பதை காட்டும் பட்டியல் வரும். உங்களுக்கு தேவையான துறையை தேர்வு செய்து, தேவையான விவரங்களை உள்ளிட்டு, ஆவணங்களை பதிவேற்றலாம். பின்னர் சான்றிதழ்களை வாட்ஸ்அப்பிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த சேவை முழுவதும் ஆன்லைனிலேயே நடைபெறும் என்பதால், அரசு அலுவலகங்களுக்கு செல்வது, வேலைக்கு விடுப்பு எடுப்பது, பள்ளி அல்லது கல்லூரிக்கு லீவு போடுவது போன்ற அவசியங்கள் இனி இல்லை. எல்லாமே நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே செய்ய முடியும்.

சென்னையில் இந்த சேவையை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் பேசிய வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ், இனி அரசு சேவைகள் வாட்ஸ்அப்பில் மிக எளிதாகவும், கால தாமதமின்றி விரைவாகவும் மக்களுக்கு கிடைப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் இதனுடன் இன்னும் பல அரசு சேவைகள் இணைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Related News

Latest News