விஜய்க்கு கிடைக்கப்போகும் அந்த சின்னம்., செங்கோட்டையன் உடைத்த ரகசியம்!

தமிழக அரசியல் களம் இப்போது மெல்ல மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன், ஒரு பெரிய சஸ்பென்ஸை உடைத்திருக்கிறார். “தவெகவுக்கு ஒரு சின்னம் கிடைக்கப் போகிறது, அந்தச் சின்னத்தைப் பார்த்து நாடே வியக்கப் போகிறது, அஞ்சப் போகிறது,” என்று அவர் சொல்லியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் ஒரு பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

ஈரோட்டில் மக்களிடையே பேசியபோது, அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாகத் தாக்கினார். “நாமக்கல் கூட்டத்தில், பெரிய கட்சி நம்மிடம் வந்துவிட்டது, பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று சொன்னார்கள். ஆனால், இப்போது பிள்ளையார் சுழி போடவில்லை, வேறு சுழி போட்டிருக்கிறது,” என்று அவர் கூறியது, அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “மற்றவர்களின் முதுகில் ஏறி சவாரி செய்யலாம் என்று சிலர் கனவு கண்டார்கள், ஆனால், மக்கள் சக்தி விஜய்யை முதலமைச்சராக்கும்,” என்று அவர் பேசியது, ஒரு நேரடிச் சவாலாகவே பார்க்கப்படுகிறது.

அதே கூட்டத்தில்தான், சின்னம் குறித்த அந்த மெகா சஸ்பென்ஸையும் அவர் உடைத்தார். “எனக்கு ஒன்று நன்றாகத் தெரியும், தவெகவுக்கு மிக விரைவிலேயே சின்னம் கிடைக்கப் போகிறது. ஆனால், அதை இப்போது வெளியில் சொல்லக் கூடாது. அந்தச் சின்னத்தைப் பார்த்த பிறகுதான், இந்த நாடே வியக்கப் போகிறது, அஞ்சப் போகிறது. ஏனென்றால், இனி அந்தச் சின்னத்தை தமிழ்நாட்டில் எந்த இயக்கத்தாலும் ஜெயிக்க முடியாது,” என்று செங்கோட்டையன் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். மேலும், “நல்லாட்சியைத் தரக்கூடிய ஒரு புதிய முகத்தை மக்கள் தேடிக்கொண்டிருந்தார்கள், அந்த முகம் இப்போது கிடைத்துவிட்டது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதமே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் சின்னம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது, செங்கோட்டையன் இப்படி ஒரு சஸ்பென்ஸை வைத்திருப்பது, அந்தச் சின்னம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அது ஒரு சாதாரண சின்னமா, இல்லை, உண்மையிலேயே தமிழ்நாட்டு அரசியலின் போக்கையே மாற்றப் போகும் ஒரு சக்திவாய்ந்த சின்னமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News