2025 தொடக்கத்தில் தங்கம் கிராமுக்கு 10 ஆயிரம் ரூபாயும் ஒரு சவரன் 80 ஆயிரம் ரூபாயும் எட்டும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது நிஜமாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளாக தங்கம் விலை உயர்வு தொடர்ந்து அதிர்ச்சியளித்தது வந்தாலும், இவ்வாண்டு ஏற்பட்ட உயர்வு கணிக்க முடியாத அளவுக்கு இருந்தது.
இப்போது 2025 முடிவதற்கு மூன்று மாதங்களே உள்ளன. இந்த குறுகிய காலத்தில் தங்கம் விலை எவ்வளவு உச்சத்தை எட்டும் என்பது யாராலும் யூகிக்க முடியாது. தற்போதைய நிலவரத்தில், தங்க விலை குறையாது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால், தங்கத்தின் தேவை மேலும் அதிகரிக்கிறது.
இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில், தீபாவளி முதல் அடுத்த தீபாவளி வரையிலான காலத்தில் பங்குச் சந்தை அல்லது தங்கம் – எது அதிக லாபம் தந்தது என்பதை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2017 முதல் 2025 வரை எட்டு ஆண்டுகளில், ஏழு ஆண்டுகளில் தங்கமே முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானம் அளித்துள்ளது.
ப்ளூம்பெர்க் தரவின்படி, 2021 தீபாவளியில் நிஃப்டி 40% உயர்ந்த நிலையில், தங்கம் 5% சரிந்தது. 2022-ஆம் ஆண்டில் நிஃப்டி 1% வீழ்ச்சியடைந்தபோதும், MCX தங்கம் 5% உயர்ந்தது. 2022 முதல் 2023 வரை நிஃப்டி 10% வளர்ந்த நிலையில், தங்கம் 17.6% மற்றும் MCX தங்கம் 20.5% வளர்ச்சியடைந்தது. 2023 முதல் 2024 வரையிலான காலத்தில் நிஃப்டி 23% உயர்ந்தாலும், தங்கம் 41% உயர்ந்தது. 2024 தீபாவளியிலிருந்து இவ்வாண்டு தீபாவளி வரை நிஃப்டி வெறும் 4% மட்டுமே முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் தங்கம் 34% மற்றும் MCX தங்கம் 41% உயர்ந்துள்ளது.
இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கமே அதிக லாபம் தந்த முதலீடாக இருந்துள்ளது. தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக பங்குச் சந்தையை விட தங்கம் அதிக வருமானம் தந்துள்ளதாக வெல்த் அசோசியேட்ஸ் நிறுவனத் தலைவர் அபிஷேக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் வாங்குவது, அமெரிக்க வட்டி விகிதம் குறைந்தது, டாலர் மதிப்பு வீழ்ச்சி, புவிசார் பதட்டங்கள் போன்ற காரணிகள் தங்கம் விலை தொடர்ந்து உயரும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தங்கம் ஒரு அவுன்ஸ் 5,000 டாலரை எட்டலாம் எனவும், ஜெஃப்ரீஸ் நிறுவனம் 6,600 டாலர் வரை உயர்வதற்கான வாய்ப்பு உண்டு எனவும் கணித்துள்ளது.
இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதை தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.