போலீசாரைத் தாக்கும் அணிலின் வீடியோ
இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள லிவிங்ஸ்டன் பாரிஷ்
செரீப் அலுவலக அதிகாரிகள் தங்களது முகநூல்
பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.
லூசியானா மாகாணத்தில் உள்ள பேடன் ரூஜ் நகரில்
போக்குவரத்தை அதிகாரிகள் ஒழுங்குபடுத்திக்
கொண்டிருந்தனர். அப்போது சாலை விதிமுறைகளை
மீறி ஒரு வாகனம் சென்றது. உடனடியாக அந்த வாகனத்தைப்
பறிமுதல் செய்வதற்காகப் பின்தொடர்ந்தனர்.
அதற்குள் ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டுத்
தப்பிச்சென்றுவிட்டார் அதன் டிரைவர்.
ஆளில்லாமல் நின்றுகொண்டிருந்த அந்த டிரக்கை
பணியிலிருந்த 2 காவலர்களும் கைப்பற்றி ஓட்டிவந்து
கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அந்த
அதிகாரிகளின் தோள்பட்டைகளிலும் முகங்களிலும்
காட்டு அணில் ஒன்று தாக்கத்தொடங்கியது.
தாக்குதலைத் தடுக்க முயன்றபோது அணில் அவர்களின்
முதுகுப் பகுதிக்குச்சென்று போக்குக் காட்டியது. இறுதியாக,
அந்த அணிலைப் போலீசார் அதிரடியாகக் கைதுசெய்து
விட்டனர். பிறகு, அந்தக் காட்டு அணில் காவல்துறை
அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
சிறிதுநேரம் கழித்து வனத்துறை அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட்ட அந்த அணில் காட்டில் விடப்பட்டது.
இங்கிலாந்தில் அணில் ஒன்று 17 பேரைத் தாக்கிக் காயப்படுத்தியது.
பின்னர், ஒரு வீட்டுத்தோட்டத்தில் வேர்க்கடலைக்கு ஆசைப்பட்டு
அகப்பட்டுக்கொண்டது. இந்த சம்பவத்தின் பயம் நீங்கும்முன்பே
அமெரிக்காவில் இன்னொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
பரபரப்பான இந்த சம்பவம் அனைவருக்கும் திகிலூட்டியுள்ளது.