Monday, January 19, 2026

இந்தியாவுக்கு அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி சலுகை? முடிவுக்கு வருகிறதா வரி போராட்டம்?

இந்தியா மீது அமெரிக்கா விதித்த அபராத வரி அடுத்த மாதம் ரத்து செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன். அவர் இறக்குமதி வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரி அமெரிக்கா விதித்தது. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக மேலும் 25 சதவீத அபராத வரியும் கூடுதலாக விதிக்கப்பட்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் டெல்லியில் அமெரிக்க வர்த்தக துணை பிரதிநிதி பிரெண்ட் லின்ச் தலைமையிலான குழு இந்திய அதிகாரிகளைச் சந்தித்தது. அதில் தெற்கு மற்றும் மத்திய ஆசியா தொடர்பான பிரச்னைகள் பேசப்பட்டன.

கொல்கத்தாவில் நடைபெற்ற வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் ஆனந்த நாகேஸ்வரன் பேசினார். இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 சதவீத அபராத வரி நவம்பர் இறுதிக்குள் நீங்கும் என்றார். வரி 10 முதல் 15 சதவீதம் வரை குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாம் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் நெருக்கமானவர் என்று மீண்டும் தெரிவித்துள்ளார். இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50% வரி, இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்படுத்தியதாகவும் கூறினார். மோடியை அடிக்கடி பாராட்டி வந்த அவர், மோடியின் 75வது பிறந்தநாளில் தொலைபேசி மூலமும் சமூக வலைதளங்கள் வழியாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News