பசியே எடுக்கவில்லை, சாப்பிட தோன்றவில்லை என கூறும் பல நபர்களும் கூட நொறுக்குத் தீனிக்கு மட்டும் நோ சொல்வதே இல்லை.
சாதம், சாம்பார் காய்கறிகளை பிடிக்காத நாக்குக்கு வடை, பஜ்ஜி, சமோசா, பானிபூரி என்றால் ஏன் கூடுதல் சுவை தெரிகிறது என்பதன் அறிவியல் பின்னணியை ‘Healthy Steady Go’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
காய்கறிகள் மற்றும் நாம் அன்றாடம் எடுத்து கொள்ள வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் பலவற்றின் சுவை 10 முதல் 12 முறை சாப்பிட்ட பிறகே நம் நாவிற்கு பிடிக்க தொடங்கும்.
ஆனால், ஓரிரு முறை சாப்பிட்டு பிடிக்காத உணவுகளை அறவே ஒதுக்கி விடுகின்றனர்.
எண்ணெயில் பொரித்த மற்றும் துரித உணவுகளில் இருக்கும் அதிகமான சுவையூட்டிகள் முதல் முறையிலேயே நாக்கை கட்டி போட்டு, தொடர்ந்து அந்த சுவையை தேட வைக்கின்றன.
எட்டு மணி நேரம் தூங்காத நபர்களிடம் நடத்திய ஆய்வில், அவர்களுக்கு சுவையான உணவுகளை பார்த்ததும் மூளையில் மகிழ்ச்சிக்கு காரணமான ஹார்மோன்கள் தூண்டப்படுவதும் தெரிய வந்துள்ளது.
கார்டிசால் என்ற மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன் அதிகரிக்கும் போது, இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை சாப்பிடுவது மன அமைதியை தருவது போல ஏற்படும் உணர்வு அதே போன்ற உணவுகளை உடலை தேட வைப்பது அறிவியல் பூர்வமான உண்மை.
வேகமாக சாப்பிடுவது மூளைக்கு சரியான தகவலை அளிக்க தவறுவதால் தேவைக்கு அதிகமான உணவை சாப்பிடும் நிலையும் ஏற்படுகிறது. மாதவிடாய், கர்ப்பகாலம் போன்றவற்றில் மாறும் ஹார்மோன்களின் அளவால் நொறுக்குத் தீனி சாப்பிடும் ஆர்வம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
உடலில் உள்ள சக்கரை மற்றும் உப்பின் அளவு குறையும் போது, இயல்பாகவே நாம் சாக்லேட் மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஊட்டச்சத்து குறைபாடுகளை கலைவதன் மூலம் அனாவசியமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.
மேலும், வீட்டிலோ நண்பர்களுடனோ இருக்கும் போது, ஒருவர் நொறுக்குத் தீனி சாப்பிடலாம் என கூறினால் கூட அனைவருமே உடன்படும் படி மூளை செயல்படும் என்பதால், நல்ல உடல்நலனை உறுதி செய்ய உடலுக்கு சத்து தரும் உணவுகளையும் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.