பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தில் அதிர்ச்சி கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நகைகள் களவாடப்பட்டதால், கலையுலகமும் பாதுகாப்புத்துறையும் பரபரப்படைந்துள்ளன.
கடந்த வாரம், கொள்ளையர்கள் கிரேனின் உதவியுடன் அருங்காட்சியகத்தின் மேல்மாடி ஜன்னல் வழியாக நுழைந்தனர். அதில், மன்னர் நெப்போலியன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கிரீடம், மற்றும் பிரெஞ்சு ராணிகள் அணிந்த நெக்லஸ் உள்ளிட்ட மொத்தம் 8 விலை உயர்ந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 102 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் நகைகளைத் திருடிய பின்னர் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே பாதுகாப்பு அலாரம் செயல்பட்டதாக அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொள்ளையர்கள் மிகத் திறமையாக நடவடிக்கை எடுத்ததால், காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்த போது அவர்கள் ஏற்கனவே தப்பி விட்டனர்.
இதுகுறித்து பாரீஸ் சிறப்பு போலீஸ் படையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தற்போது தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
லூவ்ரே அருங்காட்சியகம் மோனா லிசா உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற கலைப் பொருட்களை கொண்டுள்ளதால், இத்தகைய கொள்ளை சம்பவம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிகாரிகள், மீதமுள்ள கொள்ளையர்களைக் கண்டறிய சிறப்பு குழுவை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
