தலைமைச் செயலகத்திற்குள் சோதனை நடத்தப்பட்ட பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்,
ஆனால் இதுபோல தலைமைச் செயலகத்திற்குள் சென்று சோதனை நடத்தப்படுவது முதல் முறையாக நடக்கும் விஷயம் இல்லை, தமிழக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.,
எனவே ஏழு ஆண்டுகளுக்குப் பின் தற்போது திமுக ஆட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிலும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடைபெற்றது.
பொதுவாக அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடப்பது வழக்கமான ஒன்று, ஆனால் மாநிலத்தின் அதிகார மையமாக திகழும் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்துவது என்பது ஆளும் அரசிற்கு சங்கடத்தை அளிக்கக் கூடிய ஒன்றாகும்.
இதுபோன்ற நிகழ்வுகள் தமிழக அரசியல் வரலாற்றில் அரிதாக நடக்கக்கூடியது ஆகும், கடந்த அதிமுக ஆட்சியில் தலைமை செயலாளராக ராம மோகன் ராவ் இருந்த போது 21.12.2016 அன்று அவரது வீட்டிலும் தலைமை செயலகத்தில் அவரது அறையிலும் சோதனை நடந்தது. அச்சமயத்தில் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தலைமைச் செயலகத்திற்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்திருக்க மாட்டார்கள் என்று அப்போது பேசப்பட்டது.
மேலும் அச்சமயத்தில் மு.க ஸ்டாலின் தமிழகத்தின் தன்மானமாகத் திகழும் தலைமை செயலகத்தில் ரெய்டு நடந்தது குறித்து கடுமையாக சாடினார், ஆனால் இம்முறை முன்னதாக தனது நிகழ்ச்சிகளை முடித்து விட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் இருந்து புறப்பட்டு சென்று விட்டார்.
ஒரு சில அமைச்சர்களும், அதிகாரிகளும் அங்கிருந்த நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். மேலும் செந்தில் பாலாஜியும் கைது செய்யப்பட்டுள்ளார், இந்த ரெய்டு குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை. ஆனால் இதுகுறித்து நிச்சயம் முதல்வர் விரைவில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .