கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பின்னர் போலீசார் நடத்திய சோதனையில், அது புரளி என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இரவு சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு தொலைபேசியில் ஒருவர் பேசினார். அவர் தமிழக முதலமைச்சர், பிரதமர் வீடுகள் மற்றும் குமரி மாவட்டத்தில் பல இடங்களிலும் குண்டு வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
பின்னர் சைபர் கிரைம் மூலம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கன்னியாகுமரி, உச்சம்பாறை பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 32) என்ற வாலிபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மதுபோதையில் இப்படி செய்ததாக கூறியுள்ளார். அந்த நபர் ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கடந்த 2013-ம் ஆண்டு கைதாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
