ரசிகர்களால் ‘ஆச்சி’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகை மனோரமா. மே 26ம் தேதியான இன்று அவரின் 88வது பிறந்தநாள். இதையொட்டி அவரின் நடிப்பில் வெளியான சிறந்த வசனங்கள், காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, தங்களின் அன்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அண்ணா, கருணாநிதி, என்.டி.ராமாராவ், எம்ஜிஆர், ஜெயலலிதா என்று, 5 முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை மனோரமா தான். சினிமாவில் எந்தளவுக்கு வெற்றிகளைக் குவித்தாரோ, அந்தளவுக்கு தனிப்பட்ட வாழ்வில் தோல்விகளை சந்தித்தவர்.
காதலித்து மணந்த கணவர் எஸ்.எம்.ராமநாதன் குழந்தை பிறந்து, 11வது நாளில் மனோரமாவை பிரிந்து சென்று விட்டார். அதற்குப்பிறகு தனியொருத்தியாக போராடி சினிமாவிலும், சொந்த வாழ்க்கையிலும் முன்னுக்கு வந்தார்.
சினிமாவில் ஏராளமான சாதனைகளை படைத்த மனோரமாவுக்கு, நிறைவேறாத ஏக்கம் ஒன்றுள்ளது. திருநங்கை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். ஆனால் அவரின் இந்த ஆசை கடைசிவரை நடக்காமலே போய்விட்டது.