சச்சின் டெண்டுல்கர்… இந்த ஒரு பெயர், இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக மாறியது. வெறும் 16 வயதில் இந்திய அணிக்குள் நுழைந்து, உலக பந்துவீச்சாளர்களைத் தனது பேட்டால் மிரள வைத்தார். இப்போது, அதே போன்ற ஒரு அதிசயம் மீண்டும் நிகழப் போகிறதா? “அடுத்த சச்சின் இவர்தான்” என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆச்சரியத்துடன் பார்க்கும், ஒரு 14 வயது சிறுவர் தான், வைபவ் சூர்யவன்ஷி.
இந்த ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான இந்த 14 வயது சிறுவன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி, வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றிலேயே வேகமான சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து, ஒரே இரவில் ஹீரோவானார்.
இப்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உயர் செயல்திறன் இயக்குநர் ஜூபின் பருச்சா, இந்திய கிரிக்கெட் வாரியமான BCCI-க்கு ஒரு அழுத்தமான கோரிக்கையை வைத்துள்ளார். “எப்படி சச்சினை இளம் வயதிலேயே இந்திய அணிக்கு எடுத்தீர்களோ, அதே போல, இந்த வைபவ் சூர்யவன்ஷியையும் உடனடியாக இந்திய சீனியர் அணிக்குத் தேர்வு செய்யுங்கள்” என்பதுதான் அந்தக் கோரிக்கை.
“இந்தச் சிறுவன் ஒரு வேறு உலகத்தில் இருக்கிறான். அவனது திறமை அசாத்தியமானது. குறைந்தபட்சம், அவரை இந்தியா ஏ அணிக்கு இப்போதே அனுப்புங்கள். அங்கு அவன் இரட்டைச் சதம் அடிப்பான்” என்று பருச்சா கூறியுள்ளார்.
அவர் சொன்னதற்கு ஒரு அதிர்ச்சிகரமான உதாரணத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் வலைப்பயிற்சியின்போது, உலகின் அதிவேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துகளை, இந்த 14 வயது சிறுவன் துவம்சம் செய்துள்ளான். ஆர்ச்சர் வலைப்பயிற்சியில் ஒரு அரக்கன் போல பந்து வீசுவார். ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஜாம்பவான்களே அவரது பந்துகளைச் சந்திக்கத் திணறுவார்கள். ஆனால், வைபவோ, அவரது பந்துகளை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டு, ஒட்டுமொத்த பயிற்சி ஊழியர்களையுமே திகைக்க வைத்துள்ளார் என்று கூறியிருக்கிறார்.
சமீபத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான U19 டெஸ்ட் போட்டியிலும், வெறும் 78 பந்துகளில் சதம் அடித்து, புதிய சாதனை படைத்துள்ளார் வைபவ்.
சச்சினைப் போல, இளம் வயதிலேயே இந்திய அணிக்குள் நுழைந்து, அடுத்த சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் அத்தனை தகுதிகளும் வைபவ்விடம் இருக்கின்றன. தேர்வுக்குழுவினர் இந்தக் கோரிக்கையை ஏற்பார்களா?
விரைவில், இந்திய ஜெர்சியில் இந்த இளம் புயலைப் பார்க்க முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.