Saturday, December 21, 2024

பிச்சையெடுத்து மகனுக்கு ஸ்கூட்டி வாங்கிக்கொடுத்த தாய்

பிச்சையெடுத்து மகனுக்கு ஸ்கூட்டி வாங்கிக்கொடுத்த
தாயின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த
ஒரு பெண் தனது கணவரை இழந்துவிட்டதால் பிச்சையெடுத்து
ஜீவிக்கத் தொடங்கினாள். அதில் தன்னுடைய இரண்டு
மகன்களையும் வளர்த்துவந்தாள்.

இரண்டு மகன்களும் பெரியவர்களாக வளர்ந்துவிட்ட
நிலையில், மூத்த மகனைத் தன் மாமனார் வீட்டில்
கொண்டுவிட்ட அவர், இளைய மகன் ராகேசுடன்
தனியாக வசித்துவந்தார்.

இதன்பின்னர், இளைய மகன் ராகேசுக்குத் தினக்கூலி
அடிப்படையில் வேலை கிடைத்தது. முதலில் நடந்தே
வேலைக்குச் சென்றுவந்த ராகேசுக்கு 2 சக்கர வாகனம்
மீது ஆசை வந்தது. தனது ஆசையைத் தாயிடம் கூறியுள்ளார்.

அந்தப் பாசம்மிகு தாயும் மகனின் ஆசைக்குத் தடை
போடவில்லை. நடந்துசெல்லும் மகனின் பாதங்கள்
வலிக்குமே என்றுணர்ந்து, தன் வேதனை, அவமானத்தைப்
பார்க்காமல் பிச்சையெடுத்து சேமித்த 80 ஆயிரம்
ரூபாயை மகனிடம் கொடுத்துள்ளார்.

அந்த நாணயங்களை வாளியில் எடுத்துக்கொண்டு
கிருஷ்ணா நகரில் பல்பரா ஷோரூமுக்குச் சென்றுள்ளார்
ராகேஷ். முதலில் தயங்கிய ஷோரூம் ஊழியர்கள்
மேலாளரின் அறிவுரைக்குப் பிறகு, அதனைப் பெற்றுக்
கொண்டனர்.

வாளியில் இருந்த நாணயங்களைக் கொட்டி ஷோரூம்
ஊழியர்கள் அனைவரும் எண்ணிமுடித்ததும் ஸ்கூட்டியை
ராகேசுக்கு விற்பனை செய்தனர்.

இந்தக் காட்சிகள் தற்போது அனைவரின் விழிகளிலும்
கண்ணீரை வரவழைத்துள்ளது.

தாய் என்றாலே தியாகத்தின் மறு உருவம். குடும்பத்துக்காகத்
தன் வாழ்வையே தியாகம் செய்பவள் தாய் என்பதை இந்த
நிகழ்வு மீண்டும் வெளியுலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளது.

அதேசமயம், தாயின் நிலையை உணர்ந்துகொள்ளாமல்,
ஸ்கூட்டி வாங்கிய மகனுக்கு கண்டனங்களும் வந்தவண்ணம்
உள்ளன.

என்றாலும், ஸ்கூட்டி வாங்கிக்கொடுத்து மகனின் கனவை
நிறைவேற்றிய பூரிப்பில் உள்ளார் அந்தப் பாசமிகு தாய்.

Latest news