வாடகை தராததால் பாம்பைக்கொண்டு வீட்டைப் பூட்டிய உரிமையாளர்

231
Advertisement

வாடகை கொடுக்காததால் வீட்டின் கதவைப் பாம்பைக்கொண்டு பூட்டப்பட்ட படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கென்யாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள கிடுய் நகரம் பாதுகாப்பான அதேசமயம், வேகமாக வளர்ந்து வரும் நகரங்களுள் ஒன்றாகும். மிகவும் அழகான இந்த நகரில் நிலக்கிழாரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார் ஒருவர். கொரோனா காலம் என்பதால், வாடகைக் குடித்தனக்காரருக்கு வருமானம் இன்றிப் போனது.

இதனால், வாடகைக் குடித்தனக்காரர் 2 மாதங்களாக வாடகையைக் கொடுக்கவில்லை. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இதனால் மனம் உடைந்த வீட்டு உரிமையாளர் இதுவரை உலகில் யாரும் செய்திராத கொடூரமான செயலைச் செய்தார். வாடகைக்கு இருந்தவரின் வீட்டைப் பாம்பைக்கொண்டு பூட்டி அதிர்ச்சியளித்துள்ளார்.

இந்தச் செயல் அங்குள்ள நைரோபி கவர்னர் கவனத்துக்குச் சென்றது. உடனே அவர் அதைப் புகைப்படம் எடுத்துத் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதன்பிறகு, வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது வீட்டு உரிமையாளரின் அடாவடியான செயல்.

பூட்டாகப் பயன்படுத்தப்பட்டுள்ள இந்தப் பாம்பு கடிக்காது என்றும், கடித்தாலும் அதன் விஷத்தால் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார். என்றாலும், வீட்டு உரிமையாளரின் செயலைப் பலரும் கண்டித்து வருகின்றனர்.

வீட்டு உரிமையாளரின் இந்த வஞ்சகச் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.