காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் டீ மற்றும் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். சிவகுமார் மற்றும் முருகன் ஆகிய இருவருக்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டு கைகளப்பாக மாறி உள்ளது. இது தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கடந்த செப்டம்பர் மாதம், காஞ்சிபுரம் முதன்மை நீதிபதி செம்மல் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இதுவரை எதிரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கை விசாரித்தார்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் சட்ட ஒழுங்கு டிஎஸ்பி, சங்கர் கணேஷ் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படாததால், டிஎஸ்பிஐ கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் டிஎஸ்பி சங்கர் கணேஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தனிப்பட்ட விரோதம் காரணமாக பழி வாங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.பி., கைது செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். இதன் பிறகு காஞ்சிபுரம் டிஎஸ்பி மீண்டும் பணியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் டி.எஸ்.பிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பிறகு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
