சேலை அணிந்து வந்ததால் ஒரு பெண்ணை ஹோட்டலுக்குள்
அனுமதிக்க மறுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சில மாதங்களுக்குமுன் தனக்கு நேர்ந்த இந்த சம்பவத்தை
முன்னாள் பத்திரிகையாளரான அனிதா சௌத்ரி என்னும் பெண்
தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அனிதா சௌத்ரி தனது மகளின் பிறந்த நாளைக் கொண்டாட
டெல்லியிலுள்ள அகொய்லா ஹோட்டலில் முன்கூட்டியே
பதிவு செய்துள்ளார். மகளின் பிறந்த நாளன்று அந்த ஹோட்டலுக்குள்
சென்றபோது அங்குள்ள ஊழியர்கள் அவர் அணிந்துள்ள சேலை
SMART DRESS இல்லையென்று கூறி
அனிதா ஹோட்டலுக்குள் செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.
அப்படியானால் டிரஸ்கோடு பற்றி உங்கள் ஹோட்டல் விதிமுறைகள்
அடங்கிய புத்தகத்தை எனக்குக் காட்டுங்கள் என்றுகூறி
அனிதா வாதம் செய்துள்ளார். இதனால், கோபமான ஹோட்டல் நிர்வாகம்
பவுன்சர்களையும் போலீசாரையும் அழைப்பதாகக் கூறி மிரட்டியுள்ளது.
இதன்பின், அனிதா சௌத்ரி ஹோட்டலைவிட்டு வெளியேறியுள்ளார்.
ஆனால், அனிதாவின் குற்றச்சாட்டை ஹோட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது.
இதுபற்றி ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எங்கள் உணவகத்துக்கு ஒரு பெண்மணி வந்தார்.
அவர் பெயரில் எந்த அறையும் பதிவுசெய்யப்படாததால், வாயில் அருகே காத்திருக்கும்படி மிகுந்த மரியாதையோடும் பணிவோடும் கூறினோம்.
இருப்பினும் அவரை அனுமதிப்பது பற்றி எங்கள் பணியாளர்களுடன்
பேசிக்கொண்டிருக்கும்போதே அனிதா உள்ளே நுழைந்து ஊழியர்களுடன் சண்டையிடத் தொடங்கினார்.
அதுமட்டுமன்றி எங்கள் மேலாளரையும் அறையத் தொடங்கினார்.
இதற்குமுன் எங்களின் ஹோட்டலுக்குள் பாரம்பரிய உடைகளை
அணிந்து பல வாடிக்கையாளர்கள் வருகை புரிந்துள்ளனர் என்று விளக்கமளித்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி கண்டனம் தெரிவித்து வரும் வலைத்தளவாசிகள்
சட்டப்படி ஹோட்டல் என்பது தனியார் இடமாக இருக்கலாம்.
ஆனால், பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்த
பெண்ணுக்கு அனுமதி மறுத்ததை ஏற்க இயலாது என்று கூறியுள்ளனர்.