மரத்தைக் கையால் வீழ்த்திய சிறுமி

192
Advertisement

12 வயது சிறுமி குத்துச்சண்டையால் மரத்தை வீழ்த்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் எவ்னியா. 12 வயதே நிரம்பிய இந்தச் சிறுமி தனது குத்துச்சண்டை திறமைக்காக ஆன்லைனில் புகழ்பெறத் தொடங்கியுள்ளார். அவர் மரத்தின்மீது குத்துகளை வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறுமியின் தந்தை ருஸ்ட்ராம் சாத்வகாஸ் பிரபலக் குத்துச்சண்டை வீரர். எவ்னியாவுக்கு நான்கு வயதாகும்போதே மகளின் குத்துச்சண்டை ஆர்வத்தையும் திறமையையும் புரிந்துகொண்ட ருஸ்ட்ராம், எவ்னியாவுக்குப் பயிற்சியளிக்கத் தொடங்கினார்.
தனது ஏழு உடன்பிறப்புகள் மற்றும் தந்தையுடன் வாரத்துக்கு ஐந்துமுறை பயிற்சி பெறுகிறார் எவ்னியா.

2020 ஆம் ஆண்டில் பளுதூக்கும் போட்டியில் 80 கிலோ எடையைத் தூக்கி உலகையே திரும்பிப் பார்க்கவைத்தார் சிறுமி எவ்னியா. தற்போது குத்துச்சண்டை வலிமையால் ஒரு மரத்தையே வீழ்த்தியுள்ளார். அவரது உடல்வலிமையும் மனவலிமையும் பலருக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

தந்தையின் வழிகாட்டுதலால் உலகப் புகழ்பெற்றுவிட்டார் எவ்னியா. தந்தையின் வழிகாட்டுதல் இருந்தால் குழந்தைகள் எளிதில் சாதனை புரிந்து, பெற்றோருக்குப் பெருமை தேடித் தருவார்கள் என்பதற்கும், குழந்தைகளின் திறமையைப் புரிந்துகொண்டு வழிகாட்டினால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதற்கும் தகுந்த எடுத்துக்காட்டாக உள்ளது இந்த வீடியோ.

சிறுமி எவ்னியாவின் தாயார் அனியா, ஒரு ஜிம்னாஜிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.