ஒரு பக்கம் அமெரிக்கா 50% வரி விதித்து இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்கிறது. ஆனால், இந்தியா சத்தமில்லாமல் இன்னொரு பக்கம் ரஷ்யாவுடன் கைகோர்த்து, ஒரு புதிய பொருளாதார ஆட்டத்தையே தொடங்கியிருக்கிறது. இது, அமெரிக்காவின் அழுத்தத்தைச் சமாளிப்பது மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு மாபெரும் திட்டம்.
சமீபத்தில், ரஷ்யாவின் துணைப் பிரதமர் இந்தியா வந்திருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு, வெறும் சம்பிரதாய சந்திப்பு அல்ல. இது, இந்திய-ரஷ்ய உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்ன விஷயங்கள், ரஷ்யாவிற்கு ஒரு அழைப்பு மட்டுமல்ல, உலகிற்கே இந்தியா விடுக்கும் ஒரு செய்தி.
“இந்தியா ராக்கெட் வேகத்தில் வளரும் ஒரு பொருளாதாரம். எங்களுடைய ஜிடிபி 4 டிரில்லியன் டாலரைத் தாண்டிவிட்டது, எதிர்காலத்தில் 7% வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். இந்த வளர்ச்சிக்கு, எங்களுக்கு நம்பகமான நண்பர்களிடமிருந்து பெரும் வளங்கள் தேவை. குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்கள், உரங்கள், ரசாயனங்கள், இயந்திரங்கள் போன்றவற்றைத் தங்கு தடையின்றி கொடுத்தால் தான், எங்களால் முழு வளர்ச்சியை எட்ட முடியும்.” -என அவர் கூறியிருக்கிறார்.
அவர் ரஷ்ய நிறுவனங்களுக்கு ஒரு நேரடி அழைப்பையும் விடுத்திருகிறார். “இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒரு சிவப்பு கம்பள வரவேற்பைக் கொடுக்கிறது. இந்தியாவின் நவீனமயமாக்கலும், நகரமயமாக்கலும் புதிய தேவைகளை உருவாக்குகின்றன. இந்த அம்சங்கள் அனைத்தும், ரஷ்ய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இன்னும் தீவிரமாக இணைந்து வேலை செய்ய ஒரு அழைப்பு. இந்த சவாலை எதிர்கொள்ள அவர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்,” என்றார்.
இந்த உறவில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. அதுதான் வர்த்தகப் பற்றாக்குறை. சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால், நாம் ரஷ்யாவிடமிருந்து நிறைய பொருட்களை இறக்குமதி செய்கிறோம், ஆனால் ரஷ்யாவிற்கு நாம் ஏற்றுமதி செய்வது ரொம்பவும் குறைவு. இந்த வர்த்தகத்தில் ஒரு சமநிலையைக் கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. “அரசாங்கங்களாகிய நாங்கள், உங்களுக்கான வழியைக் காட்டுவோம், தொழில் நடப்பதற்கான சிறந்த சூழலை உருவாக்குவோம்,” என்றும் ஜெய்சங்கர் உறுதியளித்திருக்கிறார்.
சரி, இதற்கும் அமெரிக்காவின் வரி விதிப்பிற்கும் என்ன சம்பந்தம்?
முக்கியமான விஷயமே இங்கேதான் இருக்கிறது. அதான், பிரிக்ஸ். அமெரிக்காவின் டாலரைத் தவிர்ப்பதன் மூலம், டிரம்பின் வரி மிரட்டலை எளிதாகச் சமாளிக்க முடியும். ஏற்கனவே, இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான வர்த்தகம், அவரவர் சொந்த நாணயத்தில், அதாவது ரூபாய் மற்றும் ரூபிளில் தான் நடக்கிறது.
இப்போது மத்திய அரசின் திட்டம், இந்த வர்த்தகத்தை இன்னும் பலப்படுத்தி, இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்துவது. இது மட்டுமல்ல, பிரிக்ஸ் அமைப்பில் உள்ள மற்ற நாடுகளுடனும் இதேபோல சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.
ஆக, ஒரு பக்கம் அமெரிக்காவின் அழுத்தத்தைச் சமாளிப்பது, இன்னொரு பக்கம் இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தி, நம்ம பொருளாதாரத்தை வலுப்படுத்துவது. இதுதான் மத்திய அரசின் தற்போதைய திட்டம்.