பேருந்தை வழிமறித்து கண்ணாடிகளைத் தாக்கிய யானையிடமிருந்து பயணிகளைப் பாதுகாப்பாக டிரைவர் காப்பாற்றிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மேல்தட்டுப்பள்ளம் என்னும் பகுதியில் அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்தப் பகுதி யானை, கரடி, சிறுத்தை, காட்டெருமை நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், பேருந்தை மெதுவாக ஓட்டிச்சென்றார் டிரைவர்.
அப்போது எதிர்பாராத விதமாக யானை ஒன்று பேருந்தை வழிமறித்தது. உடனே டிரைவர் பேருந்தைப் பின்னோக்கி இயக்கினார். யானையும் விடவில்லை. துரத்திக்கொண்டே சென்றது.
இதனால் சட்டென்று பேருந்தை நிறுத்தினார் டிரைவர். ஆனாலும், யானை ஆவேசத்தோடு பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியைத் தந்தத்தாலும் துதிக்கையாலும் தாக்கத் தொடங்கியது.
டிரைவரோ சற்றும் பதற்றமடையாமல் இருக்கையிலிருந்து எழுந்துசென்று பயணிகள் இருக்கை அருகே நின்றுகொண்டார். பயணிகளும் பயத்தில் உறைந்து அமைதியாக இருந்தனர்.
யாரும் கூச்சல் எதுவும் எழுப்பாததால், நிசப்தம் நிலவியது. அமைதி நிலவியதைக்கண்ட யானைக்கு கோபம் தணிந்ததுபோலும்.
கண்ணாடியைத் தாக்கியதோடு விட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு அருகிலிருக்கும் வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது.
இதுதான் தக்க சமயம் என்று கருதி அங்கிருந்து டிரைவர் உடனடியாகப் பேருந்தைக் கிளப்பிச் சென்றுவிட்டார். பயணிகள் அனைவரும் ஆபத்தில்லாமல் தப்பித்துவிட்டனர்.