தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்தை பார்க்கும் போதும், தங்கம் விலை விரைவில் குறைய வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இந்நிலையில், தங்கம் விலை ஏற்றத்துக்குக் காரணமான முக்கிய அம்சங்கள் மற்றும் எதிர்காலப் பரிந்துரைகள் குறித்து பார்ப்போம்.
தங்கம் விலை அதிகரிப்பதில் புவிசார் அரசியல் நிலை, பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகள், மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகமாக வாங்குவது, மற்றும் டாலர் மதிப்பு ஆகியவை முக்கிய காரணிகள். சந்தை ஆய்வாளர் ஹான் டான் கூறியதாவது, ‘சர்வதேச வர்த்தகப் போர் பற்றிய கவலைகள் காரணமாகவே தங்கம் விலை 4,100 டாலரை கடந்துள்ளது. மாத இறுதியில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன’ என தெரிவித்துள்ளார்.
கடைசியாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே வரி மோதலும் தங்கம் விலையை உயர்த்திய முக்கிய காரணமாகும். ஒரு சில நாட்களுக்கு முன், அமெரிக்கா சீன பொருட்களுக்கு 100% வரி விதிக்கப் போவதாக ட்ரம்ப் அறிவித்தார், அதற்கு பதிலாக சீனா அமெரிக்கக் கப்பல்களுக்கு துறைமுக கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்தது. இதனால் உலகின் இரண்டு மிகப்பெரும் பொருளாதார நாடுகள் மோதுவதால், தங்கம் விலை அதிகரித்துள்ளது.
இந்த மாதம் இறுதியில் அமெரிக்க பெடரல் வங்கி ஆலோசனைக் கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், டாலர் மதிப்பு குறைந்து தங்கம் விலை மேலும் உயரும். பாங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் சொசைட்டி ஜெனரல் ஆய்வாளர்கள், 2026ம் ஆண்டில் தங்கம் ஒரு அவுன்ஸ் 5,000 டாலரை எட்டும் என கணித்துள்ளனர். இது தற்போது இருந்து சுமார் 22% உயர்வு என்பது அதிர்ச்சிக்குரியதாகவே இருக்கிறது.
