Friday, December 12, 2025

அடியோடு மாறிய தொல்காப்பிய பூங்கா! சென்னையின் புதிய அடையாளம்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள தொல்காப்பியப் பூங்கா, நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் ரூ.42.45 கோடி செலவில் இந்த மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொல்காப்பியப் பூங்காவின் பகுதி 1 மற்றும் 2-ஐ இணைக்கும் வகையில் சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு, டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் இருந்த குழாய் கால்வாய்க்கு பதிலாக 3 வழி பெட்டக கால்வாய் நிறுவப்பட்டுள்ளது.

இந்த பூங்காவை முன்னாள் முதல்வர் கருணாநிதி 2008ம் ஆண்டு அடிக்கல் நாட்டி, அடையாறு உப்பங்கழியைச் சீரமைத்து 58 ஏக்கர் பரப்பில் உருவாக்கியிருந்தார். பின்னர் 2011ம் ஆண்டு ஜனவரி 22 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பராமரிப்பு குறைவால் பூங்கா பழுதடைந்தது.

இதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் 2021 ஜூலையில் மறுமேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மையம், நடைபாதை, சிற்றுண்டியகம், கழிப்பறைகள், திறந்தவெளி அரங்கம், குழந்தைகள் விளையாட்டு பகுதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.

முழுமையாக புதுப்பிக்கப்பட்ட இந்த தொல்காப்பியப் பூங்கா, ராஜா அண்ணாமலைபுரம், எம்ஆர்சி நகர், அடையாறு, மந்தைவெளி, பட்டினம்பாக்கம் மற்றும் மயிலாப்பூர் பகுதிகளின் மக்களுக்கு பொழுதுபோக்கிற்கும், இயற்கைச் சூழலை ரசிப்பதற்கும் முக்கிய மையமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News