இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாகக் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து, ஆயிரக்கணக்கான பதிவுகளைப் போட்டு, இந்தியாவின் முன்னணி அரசியல் கட்சிகள் சேர்த்த ஃபாலோயர்களின் எண்ணிக்கையை, வெறும் ஐந்தே நாட்களில் முறியடித்து ஒரு புதிய சாதனை படைத்திருக்கிறது ஒரு ‘நையாண்டி’ இயக்கம். அதுதான் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ எனப்படும் சி.ஜே.பி (CJP).
தற்போதைய நிலவரப்படி, இன்ஸ்டாகிராம் தளத்தில் ஆளுங்கட்சியான பிஜேபியை விட இந்தக் கட்சி அதிக ஃபாலோயர்களைக் பெற்றுள்ளது. பிஜேபிக்கு சுமார் 8.7 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில், சி.ஜே.பி பக்கம் தற்போது 12 மில்லியனுக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பிஜேபி தனது 8 மில்லியன் ஃபாலோயர்களைச் சேர்க்க சுமார் 18,000 பதிவுகளைப் போட்டுள்ளது. ஆனால், இந்த ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ வெறும் 56 பதிவுகளிலேயே 10 மில்லியன் இலக்கைக் கடந்து புதிய சரித்திரம் படைத்திருக்கிறது.
இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணம், கடந்த மே 15-ஆம் தேதி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் நீதிமன்ற விசாரணையின் போது பயன்படுத்திய ஒரு வார்த்தைதான். சமூக வலைதளச் செயல்பாட்டாளர்கள் ,இளைஞர்கள் மற்றும் சில வழக்கறிஞர்களைக் ‘கரப்பான் பூச்சிகள்’ மற்றும் ‘ஒட்டுண்ணிகள்’ என அவர் ஒப்பிட்டுப் பேசியதாக எழுந்த செய்தி, இந்திய இளைஞர்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவியது. வேலையில்லாத் திண்டாட்டம், தேர்வுத் தாள் கசிவு என ஏற்கனவே விரக்தியில் இருந்த ‘ஜென்-ஸி’ (Gen Z) தலைமுறை இளைஞர்கள், தங்களை இழிவுபடுத்தியதாகக் கருதி இதற்குப் பதிலடி கொடுக்கத் தொடங்கினர்.
இந்த எதிர்ப்பைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்தவர் தான் அபிஜீத் தீப்கே. “எங்களை நீங்கள் கரப்பான் பூச்சி என்று அழைத்தால், நாங்கள் அதே பெயரிலேயே ஒரு அமைப்பைத் தொடங்குவோம்” என்று அவர் ஆரம்பித்த இந்த நையாண்டி இயக்கம், இன்று ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாக மாறியிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 13.2 மில்லியன் ஃபாலோயர்களுடன் முதலிடத்தில் இருந்தாலும், சி.ஜே.பி-யின் இந்த மின்னல் வேக வளர்ச்சி பாரம்பரிய அரசியல் கட்சிகளை மிரள வைத்துள்ளது. இன்னும் கொஞ்ச நேரங்களில் காங்கிரசையும் முந்தி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இல்லை என்றாலும், இணையதள மீம்ஸ்கள் மற்றும் பகடி மூலமாக இந்திய இளைஞர்கள் தங்களின் தார்மீகக் கோபத்தைப் பதிவு செய்யும் ஒரு வலிமையான ஆயுதமாக இது உருவெடுத்துள்ளது. தங்களை இழிவாகப் பேசுபவர்களுக்குத் தங்களின் டிஜிட்டல் பலத்தால் இளைஞர்கள் கொடுத்திருக்கும் இந்த பதிலடி, வருங்கால அரசியலில் சமூக ஊடகங்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் எளிய மக்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு இந்த ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ ஒரு மிகப்பெரிய பாடமாகத் திகழ்கிறது.
