தீபாவளி பரிசாக பிரதமர் கொடுத்த வாக்குறுதியை போலவே மத்திய அரசு, பொது மக்களுக்கு மிகப்பெரிய ஒரு தீபாவளி பரிசை கொடுத்திருக்கிறது . அதாவது, பல்வேறு பொருட்களுக்கான GST வரியை குறைத்து செப்டம்பர் 22ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
இந்த GST வரி சீர்த்திருத்தத்தில் மக்களுக்கு கிடைத்திருக்கும் உண்மையான தீபாவளி பரிசு என்றால் அது காப்பீடு திட்டங்களுக்கான GST வரியை நீக்கியது தான். உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருப்பது இந்தியா தான். ஆனால் இந்தியாவில் 5இல் ஒருவருக்கு தான் மருத்துவ காப்பீடு இருக்கிறது என்பது ஆச்சரியமே.
இதற்கு பிரீமியம் தொகை அதிகமாக இருப்பதே காரணமாக கூறப்படுகிறது. அதனால். அதன் மீதான GST வரியை நீக்கினால் பிரீமியம் தொகை குறையும். எனவே பலரும் அவற்றை வாங்குவதற்கு முன் வருவார்கள் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது .
இந்த சூழலில் தான் GST கவுன்சில் இந்தியாவில் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்கள் மீது இத்தனை காலம் வசூல் செய்து வந்த 18 சதவீத GST வரியை முற்றிலுமாக நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
எடுத்துக்காட்டாக, ஒரு சராசரி மிடில் கிளாஸ் குடும்பம் 20,000 ரூபாய் மதிப்பிலான மருத்துவ காப்பீடு திட்டத்தை பெறுகிறது என வைத்துக் கொள்வோம். இதற்கு முன்பு அதற்கு 18 சதவீதம் GST தொகையாக 20 ஆயிரம் ரூபாய் காப்பீடு பீரிமியம் மற்றும் GST 3,600 ரூபாய் என மொத்தம் 23,600 ரூபாயை அவர்கள் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் செப்டம்பர் 22ம் தேதிக்கு பிறகு மருத்துவ காப்பீடு எடுப்பவர்களுக்கு GST கிடையாது.
எனவே அவர்கள் அந்த 20,000 ரூபாய் தொகை மட்டுமே செலுத்தினாலே போதும். மருத்துவ காப்பீடு மீதான GST நீக்கப்பட்டதன் மூலம் ஒரு சராசரி குடும்பம் 3,600 ரூபாயை மிச்சப்படுத்துகிறது. இது பொதுமக்களிகையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு உண்மையிலே பண்டிகை காலத்துக்கான பரிசாகவே பார்க்கப்படுகிறது.