இந்திய போக்குவரத்தில் ரயில்கள் முக்கியமான உயிர்நாடியாக விளங்குகின்றன. தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பெர்த் வசதி இருப்பதால், பேருந்து பயணத்தை விட ரயில் பயணம் அமைதியானதும் நிம்மதியானதுமாக கருதப்படுகிறது.
ஆனால் அண்மைக்காலமாக இந்த நிம்மதியான சூழலை பாதிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் இரவு நேர அமைதியை குலைக்கும் செயல்கள் நடைபெறுகின்றன.
இரவு 10 மணிக்குப் பிறகான விதிமுறைகள்
Indian Railways விதிகளின்படி, முன்பதிவு பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அமைதியை கடைபிடிக்க வேண்டும்.
செல்போனில் சத்தமாக பேசக்கூடாது. பாடல்கள், திரைப்படங்கள் அல்லது குறும்படங்கள் பார்க்கும்போது கண்டிப்பாக காதுக்கருவி பயன்படுத்த வேண்டும்.
இரவு 10 மணிக்குப் பிறகு விளக்குகளை அணைக்க வேண்டும். நடுப்பெர்த்தை (மிடில் பெர்த்) இரவு 10 மணிக்கு அமைத்து, காலை 6 மணிக்கு இறக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் சிலர் அதிக சத்தத்துடன் காணொளிகள் பார்ப்பது, பாடல்கள் கேட்பது, தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சக பயணிகள், குறிப்பாக மூத்த குடிமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மூத்த குடிமக்களுக்கு பாதிப்பு
60 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் அமைதியான உறக்கத்தை எதிர்பார்த்து முன்பதிவு செய்து பயணம் செய்கிறார்கள். ஆனால் இரவு நேர சத்தத்தால் அவர்கள் அவதிப்படுகின்றனர். “கட்டணம் செலுத்தியும் நிம்மதியாக உறங்க முடியவில்லை” என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரயில்வே எச்சரிக்கை
இந்த சூழ்நிலையில், விதிகளை மீறும் பயணிகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, காதுக்கருவி இல்லாமல் காணொளி பார்ப்பது, இரவு 10 மணிக்குப் பிறகு விளக்குகளை அணைக்காமல் இருப்பது, சக பயணிகளுடன் சத்தமாக பேசுவது போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் அனைவரும் சக பயணிகளின் நிம்மதியை மதித்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதே ரயில்வே நிர்வாகத்தின் வேண்டுகோளாகும். அமைதியான மற்றும் பாதுகாப்பான பயண சூழலை உருவாக்குவது ஒவ்வொரு பயணியினதும் பொறுப்பாகும்.
