தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கி அரசியல் பயணத்தில் களமிறங்குகிறார் நடிகர் விஜய், ‘ஜனநாயகன்’ திரைப்படத்துடன் திரை பயணத்திற்கு முடிவுரை அறிவித்துள்ளார். இந்த திரைப்படத்தை KVN நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்றாலும், மேலும், இந்த திரைப்படம் விஜயின் இறுதி படம் என்பதால் வழக்கத்தை விடவும் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இதனால், பொங்கல் பண்டிகைக்கு மற்ற படங்கள் வெளியாகாது என திரைத்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படத்தை வரும் பொங்கல் பண்டிகைக்கு களம் இறக்குவதாக படக்குழு அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா என நடிகர்கள் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தை, Dawn Picture நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை, ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. அரசியல் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை, தேர்தலுக்கு முன்பாக வெளியிடுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 14ஆம் தேதி ’பராசக்தி’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜயின் இறுதிப்படம் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், வெறும் நான்கு நாட்கள் இடைவெளியில் வெளியாகும் ‘பராசக்தி’ படத்திற்கும் அதிக திரைகளை பெற படக்குழு முயற்சிக்கும் எனக் கூறப்படுகிறது.பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்ன நடக்க போகிறது என்று !!
