சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வந்த கம்போடியா – தாய்லாந்து போர், ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த தாய்லாந்து, கம்போடியா இரு நாடுகளும் நீண்ட தூரத்துக்கு தங்களது எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன.
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் ஒன்று யாருக்கு சொந்தம்? என்பதில், இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் மோதல் வெடித்தது. தொடர்ந்து இது போராகவும் மாறியது. இதையடுத்து இரண்டு நாடுகளும் போரைக் கைவிட வேண்டும் என, உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் போரினை கைவிடவில்லை என்றால், இரண்டு நாடுகளுடனும் வர்த்தகம் செய்யப்போவதில்லை என அறிவித்தார். இதையடுத்து இரண்டு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தன.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கம்போடியா பிரதமர் ஹன் மானெட், தாய்லாந்து தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய் கலந்து கொண்டனர். இறுதியில் எந்த நிபந்தனைகளும் இல்லாமல், போர் நிறுத்தத்திற்கு இருநாட்டு பிரதமர்களும் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து தாய்லாந்து – கம்போடியா இடையேயான போர், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தென்கிழக்கு ஆசியாவில் போர் பதற்றம் தணிந்துள்ளது.