“விஜய் மாமாவுக்கு ஓட்டுப்போடச் சொல்லுங்க..” குட்டி ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்!!

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இன்று மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. இந்தத் தேர்தல் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் முதன்முறையாக அரசியல் களத்தில் நேரடியாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம், மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய்க்கு குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த ஆதரவு தேர்தல் பரப்புரையிலும் வெளிப்படையாகக் காணப்படுகிறது. குறிப்பாக, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பிரசாரத்தின் இறுதிநாளான இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விஜய் உரையாற்றினார். அப்போது, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடம் அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். “உங்களுக்கு பிடித்த விஷயங்களை பெற நீங்கள் எப்படி முயற்சி செய்கிறீர்களோ, அதுபோல் உங்கள் விஜய் மாமா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வீட்டில் உள்ள பெரியவர்களிடம் வாக்கு கேளுங்கள்” என்று அவர் கூறினார்.

மேலும், “யாராவது வாக்களிக்காமல் வீட்டில் இருந்தால், அவர்களை ஊக்குவித்து வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்றும் கேட்டுக்கொண்டார். விஜயின் இந்த உரை மற்றும் குழந்தைகளின் ஆதரவு சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

Related News

Latest News