இந்திய ரயில்வே துறை, தட்கல் (Tatkal) ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிதாக ஒரு முக்கியமான விதியை நடைமுறையில் கொண்டு வந்துள்ளது. இனி, தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பயணிகள் ஐஆர்சிடிசி ஆன்லைன் செயலி, நேரடி ரயில் நிலையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வாயிலாக முன்பதிவு செய்தாலும், இந்த புதிய நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.
டிக்கெட் முன்பதிவின்போது பயணியின் ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கேட்டுக்கொள்ளப்படும். அந்த எண்ணுக்கு வரும் ஓடிபியை உள்ளீடு செய்தால் மட்டுமே டிக்கெட் முன்பதிவு முடியும்.
இந்த புதிய நடவடிக்கை, தட்கல் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் மோசடிகளை குறைக்க அமலுக்கு வந்திருப்பதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தட்கல் முன்பதிவு தொடங்கும் முதல் 30 நிமிடங்களுக்கு, பொதுமக்கள் மட்டும் தனது ஐஆர்சிடிசி கணக்கில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அதன் பிறகு தான் முகவர்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
பயணிகள் கவனிக்க வேண்டியவை: ஆதார் எண் மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் தயாராக வைத்திருக்க வேண்டும். டிக்கெட் புக் செய்யும் போது வரும் ஓடிபி-யை உடனே தர வேண்டும்.