1991ம் ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகமான டாடா சியரா (Tata Sierra) என்ற கார், தனது விற்பனையை 2003ல் நிறுத்தியது. எஸ்யூவி (SUV) வகையைச் சேர்ந்த இந்த பிரபலமான மாடல், 22 ஆண்டுகள் கழித்து இன்று (நவம்பர் 25) மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் இன்று நடைபெற்ற சிறப்பு விழாவில் புதிய சியராவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. புதிய வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பங்கள், மற்றும் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் சியரா திரும்பி வந்துள்ளது.
பாதுகாப்பு அம்சங்களில் சியரா காரின் அனைத்து மாடல்களிலும் 6 ஏர்பேக்குகள், 3-பாயிண்ட் இஎல்ஆர் சீட்பெல்ட்கள், 360 டிகிரி கேமரா, நான்கு சக்கர டிஸ்க் பிரேக், மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டபிலிட்டி ப்ரோக்ராம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், லெவல் 2 ஏடாஸ் (ADAS) தொழில்நுட்பத்துடன் 20க்கும் மேற்பட்ட உதவி அமைப்புகள் — லேன் கீப் அஸிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், இன்டலிஜென்ட் ஸ்பீடு அஸிஸ்ட் போன்றவை இடம்பெற்றுள்ளன.
செயல்திறனைப் பொறுத்தவரையில், சியரா 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று இன்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது.
புதிய சியரா காரின் ஆரம்ப விலை 11.49 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களின் விலைகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன. முன்பதிவுகள் டிசம்பர் 16ல் தொடங்கும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
