தமிழகத்தின் புதிய ‘சரித்திரம்’! விஜய்க்கு காத்திருக்கும் விஸ்வரூப சவால்கள் ?

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு புதிய கட்சியும் காணாத ஒரு பிரம்மாண்டமான எழுச்சியைத் தற்போதைய தேர்தல் முடிவுகள் காட்டிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, தமிழகத்தின் அசைக்க முடியாத சக்திகளாகக் கருதப்பட்ட திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலை ஓரங்கட்டிவிட்டு, சுமார் நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று தனிப் பெரும்பான்மையை நோக்கி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னேறி வருவது ஒட்டுமொத்த இந்தியாவையே உற்று நோக்கச் செய்துள்ளது.

இதிலும் மிக முக்கியமாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் ஏழாவது சுற்று முடிவில் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்திருப்பது, ஆளுங்கட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியமாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு விஷயத்தைத் தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றன. அது, பல ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு சக்தியைத் தேடிக்கொண்டிருந்த மக்களின் ஆத்திரமும், இளைஞர்களின் எழுச்சியும் தற்போது ஒரு முழு உருவம் பெற்றுள்ளது என்பதுதான்.

தவெக தனித்து நின்று இந்த அளவிற்கான இடங்களைக் கைப்பற்றியிருப்பது சாதாரண விஷயம் அல்ல. அதே சமயம், திமுக மற்றும் அதிமுகவின் மெகா கூட்டணிகள் தவிடுபொடியாகி இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். காங்கிரஸ், பாஜக மற்றும் இடதுசாரிகள் என எந்தக் கட்சியாலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போன சூழலில், வடதமிழகத்தில் பாமக மட்டுமே ஓரளவு தனது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஆனால், இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு மத்தியில் விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள் மிகக் கடுமையானவை. முதலாவதாக, 118 என்ற மேஜிக் எண்ணைத் தொட்டு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது விஜய்யின் முதல் இலக்கு. தற்போது நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில், இன்னும் ஒரு சில இடங்கள் குறைந்தால் கூட, அவர் மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய சூழல் உருவாகலாம்.

அப்படி ஒரு நிலை வந்தால், அதுவே அவரது அரசியல் பயணத்தின் முதல் நெருக்கடியாக மாறும். ஏனெனில், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகப் பல தசாப்தங்களாக எதிரெதிர் துருவங்களாக நின்ற திமுகவும் அதிமுகவும் ஒரு கட்டத்தில் கைகோர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதிகாரம் கைநழுவிப் போகும் சூழலில் லாலு பிரசாத் யாதவும் நிதிஷ் குமாரும் இணைந்ததைப் போல, விஜய்க்கு எதிராக இவர்கள் இருவரும் ஒரு மறைமுகக் கூட்டணியை உருவாக்க முயல்வது விஜய்க்கு விடுக்கப்படும் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

அடுத்ததாக, நிர்வாக ரீதியான சவால்கள். 113 தொகுதிகளில் வெற்றி பெற்று கோட்டைக்குச் செல்லும் பட்சத்தில், அனுபவம் வாய்ந்த இரண்டு ஜாம்பவான் கட்சிகளை எதிர்க்கட்சிகளாகக் கொண்டு சபையை நடத்துவது விஜய்க்கு ஒரு அக்னிப் பரீட்சையாகவே இருக்கும். இதுவரை திரையுலக பிம்பமாக மட்டுமே பார்க்கப்பட்ட விஜய், இனி ஒவ்வொரு நாளும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள், நிதி நெருக்கடிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் தனது ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் சேப்பாக்கம் தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை பெற்றுள்ளது என்றால், அந்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது சாதாரண காரியம் அல்ல. இறுதியாக, இந்தத் தேர்தல் வெற்றி என்பது வெறும் ‘ஆண்டி இன்கும்பன்சி’ (Anti-incumbency) எனப்படும் ஆட்சிக்கு எதிரான அலை மட்டும் தானா அல்லது திராவிட அரசியலுக்கு மாற்றான ஒரு நிரந்தரத் தீர்வா என்பதை விஜய் தனது செயல்பாடுகள் மூலம் நிரூபிக்க வேண்டும். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இனி தங்களது இருப்பைத் தக்கவைக்க விஜய்க்கு எதிராக மும்முனைப் போட்டியைத் தீவிரப்படுத்தும்.

இந்த அரசியல் சதுரங்கத்தில், தனது கட்சியினரைச் சிதறாமல் தற்காத்துக் கொள்வதும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் விஜய்க்கு முன்னால் இருக்கும் இமயமலை போன்ற சவால்கள். தமிழக மக்கள் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைத் தொடங்கி வைத்துள்ளனர், அந்த மாற்றத்தைத் தக்கவைத்துக்கொள்வது இனி விஜய்யின் கைகளில்தான் உள்ளது.

Related News

Latest News