Tuesday, April 15, 2025

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்து வந்த பாதை

தமிழ்நாடு பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் மட்டுமே இருக்கிறது. இந்த நேரத்தில் மாநில தலைவரை பாஜக மாற்றியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நேரத்தில் நயினார் நாகேந்திரன் யார்? அரசியலில் அவர் கடந்து வந்த பாதை குறித்து இங்கே பார்க்கலாம்.

1960ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள தண்டையார் குளத்தில் நயினார் நாகேந்திரன் பிறந்தார்;

எம்.ஏ பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் நயினார் 1989ம் ஆண்டு, தனது 29வது வயதில் அதிமுகவில் இணைந்து அரசியலில் கால்தடம் பதித்தார். அதிமுக பணகுடி நகரச் செயலாளராக ஆரம்பித்த இவரது அரசியல் பயணம் படிப்படியாக இளைஞரணி செயலாளர், நெல்லை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளர், தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் என வளர்ச்சி அடைந்தது.

2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். திமுக வசமிருந்த நெல்லை தொகுதியை தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே அதிமுக வசமாக்கினார். இதில் மகிழ்ந்து போன முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் பதவியை தூக்கிக் கொடுத்தார். மின்சாரம், போக்குவரத்து, தொழிற்துறை என்று அடுத்தடுத்து மூன்று துறைகளுக்கு நயினார் தூக்கி அடிக்கப்பட்டாலும் அமைச்சர் பதவி பறிபோகவில்லை.

அடுத்துவந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். மீண்டும் 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்; ஆனால் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. தொடர்ந்து 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டுமொரு தோல்வியைத் தழுவினார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலிலதா மறைவிற்கு பிறகு, 2017ம் ஆண்டு அதிமுக கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதற்கு பரிசாக மாநில துணைத்தலைவர் பதவியை பாஜக வழங்கியது. 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

அதன் பின்னர், 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பாஜக வழங்கியது. இவருக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருநெல்வேலிக்கு வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். நெல்லை மக்களின் ஆதரவுடன் பாஜக எம்எல்ஏவாக சட்டமன்றத்தில் நுழைந்தார்.

இதனால் மகிழ்ந்து போன பாஜக தமிழக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியை அவருக்குக் கொடுத்தது. 2024ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக சார்பில், நெல்லையில் போட்டியிட்டு மீண்டும் ஒரு தோல்வியைத் தழுவினார். இருந்தபோதும், பாஜகவில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை;

இந்தநிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பியதன் காரணமாக   அண்ணாமலையை மாநில தலைவர் பதவியை விட்டு நீக்கிவிட்டு தற்போது தமிழக பாஜக தலைவராக அனைவரது ஆதரவுடன் எந்தவித எதிர்ப்புமின்றி, ஒரு மனதாக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்

தமிழக பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரனின் அடுத்தகட்ட அரசியல் அதிரடிகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 

Latest news