Thursday, July 31, 2025

இது தெரியாம ‘EMI’ எடுத்தா பெரிய நஷ்டம்! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

2025 ஜூன் 6 இந்திய ரிசர்வ் வங்கி ஒரு பெரிய முடிவை எடுத்தது. ரெப்போ விகிதத்தை 6% இருந்து 5.5% ஆக 50 பாசிஸ் குறைத்துவிட்டது. இது குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள் கிடைக்கும், EMI குறையும் என மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் உண்மையிலேயே, இந்த விகிதக் குறைப்பு உங்கள் கடனுக்கு உடனடி நிவாரணமாக வருமா? எல்லோருக்கும் வருமா? என்றால், நிச்சயமாக இல்லை.

இதெல்லாம் உங்கள் கடனின் வகையைப் பொருத்து மாறும். சிலருக்கு இது ஆச்சரிய நலன் தரும். ஆனால் பலருக்கு இது ஒரு தூர சந்தோஷம் மாதிரியே இருக்கும்.

முதலில் பார்க்கவேண்டியது, உங்கள் கடன் மாறும் வட்டி விகிதமா இல்லையா என்பதை. மாறும் வட்டி என்றால், விகிதம் சந்தையின் மாற்றங்களைப் பின்பற்றும். ஆனால் நீங்கள் எடுத்த கடன் நிலையான வட்டியிலானது என்றால், ரிசர்வ் வங்கி எத்தனை புள்ளிகளை குறைத்தாலும், உங்கள் EMI-யில் ஒரு பைசா கூட குறையாது.

தனிப்பட்ட கடன்கள், கிரெடிட் கார்டு நிலுவைகள் – இவை பெரும்பாலும் நிலையான வட்டியில்தான் இருக்கும். இதனால் விகிதம் குறைந்தாலும், EMI அதேதான். ஆனால் வீட்டு கடன், கார் கடன், பத்திரங்களுக்கு எதிரான கடன்கள் – இவைகள் சில சமயங்களில் மாறும் வட்டியுடன் இருக்கலாம்.

அக்டோபர்,1. 2019 பிறகு எடுத்த எல்லா புதிய மாறும் வட்டி கடன்களும் வெளிப்புற அளவுகோலுடன் – பொதுவாக ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பழைய கடன்கள் இன்னும் MCLR என்ற உள் அளவுகோலுடன் தான் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, ரெப்போ விகிதம் குறைந்தாலும், 35%க்கும் மேற்பட்ட பழைய கடன்களில் வட்டி குறைவது மிக மெதுவாக இருக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம் – NBFCக்கள். அதாவது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள். இவை ரிசர்வ் வங்கியின் விகிதத்தை தவிர்த்து, தங்களுக்கே ஏற்ற விதமாக வட்டி விகிதங்களை நிர்ணயிக்கலாம். நீங்கள் NBFC-விலிருந்து கடன் எடுத்திருந்தால், RBI விகித மாற்றத்தின் பயன் உடனடியாக வர வாய்ப்பு குறைவு. ஆனால், சில தரமான NBFC-க்கள் குறைந்த வட்டி விகிதத்தில் நிதி பெற்று வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நன்மை தரும் வாய்ப்பும் இருக்கிறது.

இது தான் நிதர்சனமான உண்மை. ரெப்போ விகிதம் குறையும்போது உங்கள் EMI குறையுமா என்பதற்கான பதில் – அது உங்கள் கடனின் தன்மை, வங்கி அல்லது NBFC, மற்றும் நீங்கள் எப்போது கடனை எடுத்தீர்கள் என்பதைப் பொறுத்து தான் இருக்கும். விகிதம் குறைந்துவிட்டது என்று ஓடிப் போய் கடன் எடுக்காமல் , உங்கள் கடனைச் சரியாக புரிந்துகொள்ளுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News