Monday, December 8, 2025

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற சைக்கிள் : அண்ணாமலை கண்டனம்

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது : “கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 117 பேருக்கு, கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்று வழங்கிய சைக்கிள்கள், சரியாகப் பொருத்தப்படாமலும், சில உதிரிபாகங்கள் இல்லாமலும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சைக்கிள்கள், இப்படி தரமற்ற உதிரிபாகங்களுடன் வழங்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கடந்த ஆண்டுகளிலும், இது போன்ற தரம் குறைந்த சைக்கிள்கள் வழங்கப்பட்டதால், மாணவர்கள் அவற்றை நீண்ட காலம் பயன்படுத்த முடியாமல், தங்கள் சொந்த செலவில் பழுது பார்த்தும், பல மாணவர்கள் அவற்றை விற்பனை செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஒவ்வொரு ஆண்டும், குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதே பிரச்சினை தொடர்கிறது. இந்த சைக்கிள் ஒப்பந்ததாரர்கள் யார்? ஏன் தொடர்ந்து தரம் குறைந்த சைக்கிள்கள் கோயம்புத்தூர் பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன?

கோயம்புத்தூரில் மட்டும் இந்த ஆண்டு, 17,782 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொன்றும் சுமார் ₹4,300 ரூபாய் விலை என்று திமுக அரசால் கூறப்படும் சைக்கிள்கள், இப்படி அடிப்படைக் குறைபாடுகளைக் கூட சரிசெய்யாமல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

கோயம்புத்தூர் மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே, அனைத்து சைக்கிள்களும், தர பரிசோதனை நடத்திய பின்னரே வழங்கப்பட வேண்டும் என்றும், தரம்குறைந்த சைக்கிள்கள் வழங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News